மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடேவத்த சந்திக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பாதாள உலக கும்பலின் தலைவர் ஒருவரால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் நேற்றைய தினம் இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தந்தை, மகள் மற்றும் மகன் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த 6 வயதுடைய மகளும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாதாள உலக கும்பலின் தலைவர் ஒருவரின் தலைமையில் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் துப்பாக்கி தாரிகள் T -56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தந்தை பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புயைடவர் என்பதுடன், கைக்குண்டு மற்றும் ரிவோல்வர் ரக துப்பாக்கியைத் தன்வசம் வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் இவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மித்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.