Main Menu

மாலைதீவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை முக்கியத்துவம் – ஜனாதிபதி அநுர

மாலைதீவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், எதிர்வரும் ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாலைதீவுக்கான தனது அரச விஜயத்தின் போது ஜனாதிபதி ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள், நட்பு கூட்டாண்மை, நெருங்கிய நட்புறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலான மாலைதீவுக்கான எனது முதல் அரச விஜயத்தில் மாலேயிற்கு வருகை தரக்கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்குப் புதிய உற்சாகத்தையும் பலத்தையும் சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்.

இலங்கையும் மாலைதீவுகளும் முறையான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் எனது மாலைதீவு விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

எனக்கும் எனது பிரதிநிதிகளுக்கும் கிடைத்த அழைப்பிற்கும் அமோக வரவேற்புக்கும் விருந்தோம்பலுக்கும் அதிமேதகு ஜனாதிபதி முகமத் முய்சு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நீண்ட கால உறவு உள்ளது.

இந்து சமுத்திரத்தில் உள்ள நமது இரு நாடுகளும் பழங்கால கடல்வழி வர்த்தகப் பாதைகள் மற்றும் பொதுவான வரலாறு ஆகியவற்றுடன் நமது தொடர்புகளால் வளம் பெற்றுள்ளன.

சிறிது நேரத்திற்கு முன்பு, ஜனாதிபதி முய்சுவும் நானும் எங்கள் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

நமது உறவுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டதுடன், மேலும் எதிர்காலத்தில் பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் நமது ஒத்துழைப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.

எப்போதும் இலங்கைக்கு வழங்கும் நிலையான ஆதரவிற்கு ஜனாதிபதி முய்சு மற்றும் மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நமது மக்களின் பொது நலனுக்காக நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், நமது உறவை பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி முய்சுவும் நானும் இனங்கண்டோம்.

மாலைதீவில் ஏராளமான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதற்காக ஜனாதிபதி முய்சுவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

பகிரவும்...
0Shares