மாணவர்களை நல்வழிப்படுத்த உடல் ரீதியான தண்டனை பொருத்தமில்லை! -சரோஜா போல்ராஜ்

பாடசாலையில் நடைமுறையிலுள்ள தண்டனையளிக்கும் முறையின் காரணமாக, நல்ல நிலைமைக்கு வந்த மாணவர்களை விட கல்வியை பாதியில் இடைநிறுத்தியவர்களே அதிகம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பாடசாலைகளில் நடைமுறையில் உள்ள தண்டனை முறையின் காரணமாக, கல்வியை பாதியில் நிறுத்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதேசமயம் நல்ல நிலைமைக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது.
உடல் ரீதியான தண்டனை பெற்ற மாணவர்கள் வன்முறை, திருட்டு, பிழையான நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் ஆசிரியர்–மாணவர் இடையிலான தொடர்பில் விரிசல் ஏற்படுவதால் பல்வெறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
தோல்வி மனநிலை உருவாகி எதிர்காலத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும் மாணவர்கள் பாடசாலைக்கு விருப்பத்துடன் செல்லாமல் தண்டனையைத் தவிர்க்க பயந்து செல்கின்றனர். எனவே, மாணவர்களை நல்வழிப்படுத்த உடல் ரீதியான தண்டனை பொருத்தமில்லை .
அதற்காக, தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) கொண்டு மாணவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படாத விதமாக சட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இத் திருத்தம் மூலம் சிறுவர்கள் பணிக்கமர்த்தல், சிறுவர் திருமணம், கடத்தல், துஷ்பிரயோகம் போன்ற செயல்களில் இருந்து பாதுகாக்கப்படுவர்.
கல்வி மற்றும் சுகாதார துறைகளில் கொள்கைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க அரசு முயற்சிசெய்து வருகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பகிரவும்...