மன்மோகன் சிங்கின் பூதவுடல் முழு அரச மரியாதையுடன் தகனம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற மன்மோகன் சிங்கின் பூதவுடல் சீக்கிய முறைப்படி முழு அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.
அதன் ஒருகட்டமாக 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக் குறைவால் தமது 92 வயதில் சிகிச்சைகளுக்காக புது டில்லியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில் காலமானார்.
இதனையடுத்து, புது டில்லியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மன்மோகன் சிங்கின் பூதவுடல், இன்று முற்பகல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது, அவரின் பூதவுடலுக்கு காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து மன்மோகன் சிங்கின் பூதவுடல் தாங்கிய பேழை ஊர்தி காங்கிரஸின் தலைமை அலுவலகத்திலிருந்து இறுதி ஊர்வலத்தை ஆரம்பித்தது.
பின்னர் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடல், யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்திற்கு 12மணியளவில் கொண்டு வரப்பட்டது.
இதன்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன், பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கெல் வாங்சக், பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, 21 மரியாதை வேட்டுக்கள் முழங்க முழு அரச மரியாதையுடன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது
பகிரவும்...