Main Menu

மன்னார் காற்றாலைத் திட்ட ஆய்வுக்காக சென்ற குழுவினரை விரட்டியடித்த பொதுமக்கள்

இரண்டு மாதங்களுக்கும் மேலாக உள்ளூர் மக்கள் தொடர்ச்சியாக போராடுகின்ற போதிலும், அவர்களையும் மீறி காற்றாலைகளை நிறுவுவதற்காக நிலத்தை ஆய்வு செய்ய மன்னாருக்கு சென்ற ஒரு குழுவினரை அந்தக் கிராமமக்கள் விரட்டியடித்துள்ளனர்.

காற்றாலைகளை நிறுவுவதற்கான நிலத்தை ஆய்வு  செய்வதற்காக மன்னார், பேசாலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பேசாலை கிராமத்துக்கு GEO ENGINEERING CONSULTANS (PVT) LTDஇன் அதிகாரிகள் குழு அதன் இயந்திரங்களுடன் சென்றதாக பிரதேச ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கிராம மக்கள் போராட்டம் நடத்தி, ஆய்வுக்காக சென்ற குழுவினரை விரட்டியுள்ளனர்.

 

சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் வகையில், மன்னார் தீவில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலைத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்வதாக ஜனாதிபதி அறிவித்த ஒரு மாத காலத்திற்கு முன்னரே, புதிய பணிகள் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டன என்பதை போராட்டக்காரர்கள் அண்மையில் வெளிப்படுத்தினர்.

விலைமனுக் கோரல் மற்றும் ஒப்பந்தங்கள் ஊடாக, மன்னாரில் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 20 மெகாவாட் மற்றும் 50 மெகாவாட் காற்றாலைத் திட்ட கட்டுமானப் பணிகளை, தற்காலிகமாக நிறுத்திவைக்க, கடந்த ஆகஸ்ட் 13ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி தீர்மானித்தார்.

இந்நிலையில், அரச அதிகாரிகளுடனான எந்தவொரு கலந்துரையாடலிலும் தீர்வு காணப்படவில்லை என மன்னார் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

அபிவிருத்தித் திட்டங்களை மேலும் தாமதப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை இழக்கச் செய்யும் எனக் கூறிய ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க முடியாது எனவும் வலியுறுத்தினார்.

போராட்டக்காரர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, மன்னார் தீவில் நிறுவப்படவுள்ள புதிய காற்றாலைத் திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் இலங்கையின் மிகப் பெரிய தீவான மன்னாரில், மக்களின் வாழ்க்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் அழிவை ஏற்படுத்தும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் உயர் மின் காற்றாலைகள் நிர்மாணிக்கப்படுவதை எதிர்க்கும் உள்ளூர்வாசிகள், இந்தத் திட்டங்களை உடனடியாக மன்னார் தீவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என ஏகமனதாக கோருகின்றனர்.

பகிரவும்...
0Shares