Main Menu

“மக்கள் எங்களிற்கு ஒரு பாடத்தை கற்பித்துள்ளனர்” ‘புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தை சுத்தம் செய்துள்ளது” – ஹரீன்

மக்கள் எங்களிற்கு ஒரு பாடம் கற்பித்துள்ளனர்,நாங்கள் மீண்டும் எவ்வாறு எழுவது என கற்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் ஹரீண்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஹரீன்பெர்ணாண்டோ இன்று சிஐடியினரின் முன்னர் ஆஜராகியவேளை இதனை தெரிவித்துள்ளார்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமைக்கு அமைச்சரவையே காரணமா என்ற கேள்விக்கு அமைச்சரவை நேரடியான காரணமில்லை,நாளாந்தம் 60 முதல் 70 வரையிலான அமைச்சரவை பத்திரங்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை செயலாளர்களே இந்த பத்திரங்களை இறுதி செய்து சமர்ப்பிப்பார்கள்,நான் எனது அமைச்சு தொடர்பான பத்திரங்களை ஆராய்ந்துள்ளேன் எனினும் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து தனிப்பட்ட விடயங்களைசிஐடியினரிடம் தெரிவிப்பதற்காக வந்துள்ளேன் என ஹரீண்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மக்கள் எங்களிற்கு ஒரு பாடம் கற்பித்துள்ளனர்,நாங்கள் மீண்டும் எவ்வாறு எழுவது என கற்கவேண்டும்,நெருக்கடியின் போது நாங்கள் அதிலிருந்து தப்பியோடவில்லை இந்த சவாலையும் நாங்கள் எதிர்கொள்வோம் தப்பியோடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் போது எங்கள் கட்சி முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது,ஆனால் நாங்கள் இன்னும் அழிந்துபோகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹரீன்பெர்ணாண்டோ,அவர்கள் நாடாளுமன்றத்தை சுத்தம் செய்துள்ளனர்  தற்போது புதிய முகங்களை பார்க்க முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...
0Shares