மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு புதிய காவல்துறை அதிகாரிகளிடம் – ஜனாதிபதி அநுரகுமார
சட்ட ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை காவல்துறையில் சாதகமான மாற்றம் அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது காவல் திணைக்களத்தின் பொறுப்பு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
களுத்துறை, கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
பல துறைகள் வீழ்ச்சியடைந்துள்ள தருணத்தில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி அரசியல் அதிகாரத்தை மாற்றுவதற்குப் பிரஜைகள் நடவடிக்கை எடுத்ததைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,
அரசியல் அதிகாரத்தை மாற்றுவதன் மூலமாக மாத்திரம், ஒரு நாடு வெற்றிபெறாது எனவும் அனைத்து துறைகளிலும் சாதகமான மாற்றம் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு புதிய காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனைப் பாதுகாக்கும் அதேவேளை, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருளுக்கு நாடு பலியாக இடமளிக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
