போலித் தங்க மோசடி: இலங்கை எம்.பி.யை ஏமாற்றியதாக 11 பேருக்கு கானாவில் பிணை
போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் இருந்து இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு கானா – அக்ராவில் உள்ள நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, சந்தேகநபர்கள் 11 பேரும் தலா 500,000 கானா செடிகள் பிணை தொகை விதிக்கப்பட்டுள்ளமுது.
சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பணத்தைப் பெற்ற பின்னர் அந்த குழுவினர் தங்கத்தை வழங்கத் தவறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
அதிகாரிகள் தங்கமாக இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் உலோகப் பொருட்களை சந்தேகநபர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஆய்வகச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றம் செய்யச் சதி செய்தல், பொய்ப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபர்கள் நவம்பர் 20ஆம் திகதி மீளவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...