பேரிடரில் பெற்றோரை இழந்த குழந்தைகள்: அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் மோசடி திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் (திட்டமிடல்/தகவல்) ஷானிகா மலல்கொட இதனை தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கோரும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து 1929 என்ற எண்ணுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வியுறுத்தியுள்ளார்.
எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த தகவலை வெளியாட்களுக்கு வழங்குவதை பெரியவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“குழந்தைகள் பற்றிய தகவல்களுக்கான கோரிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சந்தேகத்திற்கிடமான நபர்கள் இந்த குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கோருகின்றனர்.
பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றிய தகவல்களைக் கோருகின்றனர், அவர்களுக்கு உதவி வழங்கும் திறன் இருப்பதாகக் கூறி வருகின்றனர்.
எனவே, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அmதிகாரசபையாக, எந்தவொரு சூழ்நிலையிலும் இந்தத் தகவலை வெளியாட்களுக்கு வழங்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் பகுதியின் கிராம அலுவலர், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அல்லது நன்னடத்தை குழந்தைகள் பாதுகாப்புத் திணைக்களம் உங்களிடம் கோரினால் மட்டுமே தகவல்களை வழங்கவும்.”
“உங்கள் குழந்தையின் தகவல்களை வெளியாட்களுக்கும் நிறுவனங்களுக்கும் சந்தேகத்திற்கிடமான முறையில் கொடுத்தால், உங்கள் குழந்தை பாதுகாப்பற்றதாக மாறக்கூடும்.
அவர்கள் உங்கள் குழந்தையின் புகைப்படங்களையும் கேட்கலாம். குழந்தையின் சுயமரியாதையையும், அந்தக் குழந்தை கொண்டிருக்கும் அழகான குழந்தைப் பருவ உலகத்தையும் அழிக்க எந்த வாய்ப்பையும் கொடுக்காதீர்கள்.”
“இப்போதெல்லாம், வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலம் குழந்தைகளின் தகவல்களைக் கேட்கும் தனிநபர்கள், மற்றும் குழுக்கள் உள்ளன.
இந்த வழியில் குழந்தைகளின் தகவல்களைக் கேட்கும் எவருக்கும் நீங்கள் தகவல்களை வழங்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தத் தகவல் தவறான நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சென்று, குழந்தைகள் பாதுகாப்பற்றதாக உணர அதிக வாய்ப்பு உள்ளது.”
“சில நேரங்களில், குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பாக பிரச்சினைகள் எழுகின்றன. சில தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பராமரிப்பை வழங்க தயாராக உள்ளன.
குழந்தைகளின் பராமரிப்பு பெற்றோரிடமோ அல்லது பொருத்தமான நபரிடமோ, அதாவது நன்னடத்தை திணைக்களத்திடமோ உள்ளது.
மேலும் நீதிமன்ற நடவடிக்கை மூலம் தவிர, எந்தவொரு நபரும் குழந்தைகளின் பராமரிப்பை வேறு எந்த நபருக்கும் மாற்ற முடியாது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...