Main Menu

பெண்ணின் புகைப்படங்களை ஆபாச படங்களாக வடிவமைத்து இணையத்தளத்தில் வெளியிட்ட யுவதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படங்களை டிஜிட்டல் முறையில் ஆபாச படங்களாக வடிவமைத்து இணையத்தளத்தில் வெளியிட்ட யுவதி ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு மற்றும் 5,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று வெள்ளிக்கிழமை (12) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த யுவதி மீது இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டிற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர்  சந்தேக நபரான யுவதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த யுவதி முகநூலில் இருந்து பெண் ஒருவரின் புகைப்படங்களை எடுத்து அவற்றை ஆபாச படங்களாக வடிவமைத்த்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

வழக்கு விசாரணையின் போது குறித்த யுவதி குற்றத்தை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து யுவதிக்கு எதிராக 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு மற்றும் 5,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து  நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த யுவதி கொழும்பிலுள்ள மகளிர் பாடசாலை ஒன்றின் முன்னாள் மாணவி என்பதும், தற்போது தனிப்பட்ட பரீட்சார்த்தியாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பகிரவும்...