புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நிலையான நிலையில் – மத்திய வங்கி ஆளுநர்
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களுக்கு மத்தியிலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல் நடவடிக்கைகளில் சரிவு ஏற்படவில்லை என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
எனினும், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய நிலையற்ற சூழ்நிலையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 17% குறைந்துள்ளது.
அதேநேரம், தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்கள் நாட்டிற்குத் திரும்புவது குறித்து எந்த விசாரணைகளையோ அல்லது அறிக்கைகளையோ தாம் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி வளாகத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனைக் கூறினார்.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (24) இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை (OPR) வீதத்தினை 7.75% சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய அளவில் மாறிவரும் நிகழ்வுகளையும் கண்ணோட்டங்களையும், குறிப்பாகத் தற்போதைய மத்திய கிழக்கு மோதலால் எழும் நிச்சயமற்ற தன்மைகளையும் கவனமாகப் பரிசீலித்த பின்னரே நாணயக் கொள்கைச் சபை இந்த முடிவினை எடுத்துள்ளது.
இதனிடையே, இலங்கையின் மொத்த உத்தியோகப்பூர்வ கையிருப்பு 2026 பெப்ரவரி மாத இறுதியில் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
