புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விசேட செயலமர்வு
நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு இன்று முதல் 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
அதன்படி, முதலாம் இலக்க நாடாளுமன்ற குழு அறையில் முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 4.30வரை இந்த செயலமர்வை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதி சபாநாயகர் கலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி, பிரதிக் குழுக்களின் தலைவர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் குறித்த செயலமர்வின் ஆரம்பத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மூன்று நாள் செயலமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு, நாடாளுமன்ற சிறப்புரிமைகள், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் செயல்முறை, நாடாளுமன்றக் குழு செயல்முறை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட விதிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலத்திரனியல் வாக்களிப்பு முறையின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதற்கான நடைமுறை அமர்வும் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, நாடாளுமன்ற திணைக்களத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற பணியகங்களின் தலைவர்கள், நாடாளுமன்ற செயற்பாட்டில் உறுப்பினர்களின் பங்களிப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.
பகிரவும்...
