Main Menu

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து கூட்டு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் – சிறிதரன்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் எமக்கான தீர்வுத்திட்டத்தைத் தரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கமுடியாது. மாறாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டுநிலைப்பாட்டை எடுக்கவேண்டும். இப்போது நாங்கள் தான் பசியுடன் இருக்கிறோம். பசியுடன் இருப்பவர்கள் தானே என்ன தேவை என்று கேட்கமுடியும்? என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த கலந்துரையாடலுக்க கடிதம் மூலம் அழைப்புவிடுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பதிலளித்து வெள்ளிக்கிழமை (21) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.

அக்கடிதத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதாலும், அதற்கான முன்வரைவு எதனையும் சமர்ப்பிக்கா நிலையிலும் நாம் அரசியலமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதவில்லை என்றும், உரிய நேரம் வரும்போது இதுபற்றிக் கலந்துரையாடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக்கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து ஆரம்பத்திலிருந்தே முனைப்பைக் காண்பித்துவந்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் சிவஞானம், சிறிதரனிடம் அவரது நிலைப்பாடு தொடர்பில் வினவியபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கம் எமக்கான தீர்வுத்திட்டத்தைத் தரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. மாறாக நாமனைவரும் ஒன்றிணைந்து, தமிழர்கள் சார்ந்து ஒரு கூட்டுநிலைப்பாட்டை எடுக்கவேண்டும். இப்போது நாங்கள் தான் பசியுடன் இருக்கிறோம்.

பசியுடன் இருப்பவர்கள் தானே என்ன தேவை என்று கேட்கமுடியும்? உணவை வைத்திருப்பவன், பசியுடன் இருப்பவனைப் பார்த்து உனக்கு என்ன உணவு வேண்டும் என்று கேட்கப்போவதில்லை. எனவே எம்முடைய பசிக்குரிய உணவு எதுவென்பதை நாம் தான் தீர்மானிக்கவேண்டும்.

சுமார் 80 வருடங்களாக தமிழர்களாகிய நாம் உரிமைப்பசியுடன் வாழ்கிறோம். அந்த உரிமைப்பசிக்காக நாம் செய்த தியாகங்கள் அளப்பரியவை. அதற்காக ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்திருக்கிறோம். எனவே எம்முடைய உரிமைப்போராட்டமும், தமிழர் அரசியலும் உரிமைக்காகப் போராடி மாண்ட உயிர்களின் மீதும், சாம்பல் மேட்டின் மீதும் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே இற்றைவரை உரிமைகளுக்காகப் போராடிவரும் தமிழினத்தின் தேவை மற்றும் கோரிக்கை என்னவென்பதை நாங்கள் தான் வெளிப்படையாகக் கூறவேண்டும். மாறாக அரசாங்கம் கூறும் வரை நாங்கள் காத்திருக்கமுடியாது. இவ்விடயத்தில் நாம் (தமிழரசுக்கட்சி) மாத்திரமன்றி, தமிழ்த்தேசியத்தை நேசிக்கும் சகல கட்சிகளும் இணைந்து ஒரு பொதுநிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.

பகிரவும்...
0Shares