பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் காலமானார்
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் வி.சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 67.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பய்யோலி-யில் வசித்து வந்த சீனிவாசனுக்கு நள்ளிரவு நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மயக்கமடைந்திருக்கிறார். உடனடியாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சீனிவாசன் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், இந்த ஈடு செய்ய முடியாத இழப்பை தாங்கிக் கொள்ள பி.டி. உஷாவுக்கு கடவுள் வலிமையை அளிக்க பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டிலும், பிறகு பொது வாழ்க்கையிலும் தீவிரமாக ஈடுபட்ட பி.டி. உஷாவுக்கு சீனிவாசன் ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார். எனினும், பொதுவெளியில் இருந்து அவர் விலகியே இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு உஜ்வல் விக்னேஷ் என்ற மகன் உள்ளார்.
பி.டி. உஷாவின் கணவரின் மறைவை அடுத்து, நாடு முழுவதிலும் இருந்து அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் அவருக்கு தத்தம் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு விளையாட்டு அமைப்புகளும் இரங்கலை பதிவு செய்து வருகின்றன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
தங்களின் அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் பி.டி. உஷாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
