Main Menu

பிரபல பாடகி ஜானகியின் மகன் காலமானார்

பிரபல பாடகி ஜானகியின் மகன் மாரடைப்பால் காலமானார்.

தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் பாடல் பாடியிருப்பவர் பாடகி, எஸ்.ஜானகி. இவர் குரலில் இதுவரை சுமார் 40,000 அதிகமாக பாடல்கள் வெளிவந்துள்ளன. ஆந்திராவில் உள்ள குண்டூர் அருகே இருக்கும் பகுதியில் பிறந்த ஜானகி, சினிமா படங்களில் பாட வாய்ப்பு வந்த பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்தார். பின்னர், ராம் பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜானகி-ராம் பிரசாத் தம்பதிக்கு முரளி கிருஷ்ணா என்கிற மகன் இருந்தார்.முரளி கிருஷ்ணவை பற்றி, பெரிதாக பலருக்கு தெரியாது. ஆனால், அவர் சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார். இவர், ஐதராபாத்தில் வசித்து வந்தார். இவருக்க்கும், சென்னையை சேர்ந்த நடன கலைஞரான உமா என்பவருக்கும் திருமணம் நடந்தது. முரளி-உமா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருப்பினும், முரளியும் உமாவும் பிரிந்து வாழ்ந்து, விவாகரத்தும் பெற்று விட்டனர். தற்போது ஜானகியின் பேத்திகளான இரு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

முரளி, தன் தாயாருடன் சென்னையில் இருக்கும் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று அதிகாலை அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையுலகினர் அனைவரும் ஜானகிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

பாடகி சித்ரா, “இந்தத் தாங்க முடியாத வலியையும் துயரத்தையும் தாங்கிக்கொள்ள அந்தத் தாய்க்கு இறைவன் சக்தியை வழங்குவாராக…” என்று இறங்கல் தெரிவித்திருக்கிறார். இவர் ஜானகியுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் பாடகர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. முரளியை தனது சகோதரர் என்று குறிப்பிட்டிருக்கும் சித்ரா, அவரது குடும்பத்தினருக்காக வேண்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.