பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு
பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து விசிக சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, விசிக எம்எல்ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, சிந்தனைச் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:
கிறிஸ்தவர்களுக்கு மீதான தாக்குதல் புதிதல்ல, 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசுகளின் ஆதரவோடு அதை அவர்கள் செய்து வருகின்றனர். அப்போது சிஎஸ்ஐ, இசிஐ போன்ற பெரிய அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை.
ஆனால் சிறிய தேவாலயங்கள் சிறிய அமைப்புகளைச் சார்ந்தவர்களை மதவெறி சார்ந்த அமைப்புகள் தாக்கி வருகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை உருவாக்கவே சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இன்னும் 3 மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. ஆனால் இதுவரை நம்மிடம் அதற்கான எந்த செயல்திட்டமும் இல்லை. சங்பரிவார் அமைப்புகள் இதுபோன்ற பிரச்சினைகளை உருவாக்க அடுத்த 25 ஆண்டுகளுக்கு செயல்திட்டம் வைத்துள்ளனர்.
இந்துக்களை ஓரணியில் திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக இவற்றை அவர்கள் செய்கின்றனர். இந்துக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்றால் அதற்காக ஓர் எதிரியை உருவாக்க வேண்டும்.
எனவேதான் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்திரிக்கின்றனர். ஆர்எஸ்எஸ் கும்பல் மொழி வழி தேசியவாதத்துடன் உடன்பட மாட்டார்கள். ஆனால் தூண்டிவிடும் வேலையை செய்வார்கள், தமிழ் தேசியம் மலர பாஜக ஒருபோதும் இடம் கொடுக்காது. தமிழ் தேசியத்தின் முதல் எதிரியே மதவாத தேசியம் பேசுபவர்கள்தான். இவ்வாறு அவர் பேசினார்.
பகிரவும்...