Main Menu

பயங்கரவாத தடைச்சட்டம் அடுத்த மாதம் நீக்கப்படும் என நம்புகின்றேன் – சிறிநேசன்

பயங்கரவாத தடைச் சட்டம் எதிர்வரும் மாதத்தில் நீக்கப்படும் என நான் நம்புகின்றேன். இலங்கையில் இனப்பிரச்சினை பெரிதும் காணப்படுகிறது. இனப் பிரச்சினை தீர்க்கப்படாத காரணத்தினால்தான் இலங்கை வங்குரோத்தடைந்த நாடாக இருக்கிறது என்பதை நாங்கள் பாராளுமன்றத்திலும் சுட்டிக்காட்டி இருக்கின்றோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் காக்காச்சுபட்டைக் கிராமத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (24) மாலை விஜயம் செய்த  சிறிநேசன், அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடி குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்கிற விடயத்தை நாங்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றோம். நாங்கள் ஆட்சிக்கு வந்து தற்போது ஒன்பது மாதங்கள்தான் ஆகின்றது. இக்காலப்பகுதிக்குள் நாங்கள் எல்லாவற்றையும் முடித்துவிட முடியாது. நாங்கள் சட்டவாட்சியை செய்கின்றோம். சட்டத்தின் முன் யாவரும் சமம். ஆகவே குற்றமளித்தவர்கள், மோசடி செய்தவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

சட்டத்தின் முன் சிறியவர், பெரியவர் என்றெல்லாம் பார்க்கப்படுவதில்லை. தராதரம் கூடியவர், தராதரம் குறைந்தவர் என நாங்கள் பார்ப்பதில்லை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி சட்டத்தின்படி நாங்கள் ஆட்சி செய்கின்றோம்.

கடந்த காலத்தில் ஊழல் மோசடி இலஞ்சத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தோம். அதன்படி, இப்போது சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. இது எமக்குரிய கடமையல்ல, பொலிஸார், நீதித்துறை அந்தக் கடமையை செய்கிறது என தற்போதைய அரசாங்கம் கூறி வருகிறது.

வருகின்ற மாதத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என நான் நம்புகின்றேன். கடந்த பாராளுமன்ற அமர்வின்போதிலும் நாம் திட்டவட்டமாக கேட்டிருந்தோம்.

பயங்கரவாத தடைச் சட்டம் என்பது மனித குலத்திற்கு பயங்கரமான அபாயத்தை ஏற்படுத்துகின்ற சட்டம். இலங்கைக்கு அவமானத்தையும் கேவலத்தையும் ஏற்படுத்துகின்ற ஒரு சட்டம். அந்த சட்டத்தை விரைவில் அகற்ற வேண்டும். அதன் மூலமாக ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் தொடக்கம் கடந்து வந்தவர்கள் இச்சட்டத்தை அகற்றாமல் அந்த கொடிய சட்டத்தின் மூலமாக அரச பயங்கரவாதத்தை செய்திருந்தார்கள்.

தற்போதைய அரசாங்கம் இந்த சட்டத்தை நீக்குவதன் மூலமாக இந்த அரசாங்கம் ஒரு பெருமையைத் தேடிக்கொள்ளும் என்ற விடயத்தை நாம் கேட்டிருந்தோம். வருகின்ற மாதத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு அவர்கள் உத்தரவாதம் கொடுத்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள். நாங்களும் நம்புகின்றோம். அந்த சட்டம் அகற்றப்படலாம், சட்டத்தை அகற்றிவிட்டு அதற்கு சமமான இன்னுமொரு சட்டத்தை கொண்டுவரக்கூடாது என்றும் நாங்கள் சொல்லியிருந்தோம்.

சர்வதேச ரீதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. அந்த தினத்திற்கு சகல தமிழ் தரப்புகளும் ஆதரவுகளை வழங்க வேண்டும். காணாமலாக்கப்பட்டவர்கள் என்கின்ற விடயம் உண்மையான விடயம். காணாமலாக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையான விடயம். ஆகவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கின்றபோது சகல மக்களும் அதற்கான போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்ய வேண்டும். அது ஆயுதம் ஏந்திய போராட்டம் அல்ல. அஹிம்சை ரீதியான, ஜனநாயக ரீதியான, மனித உரிமையை பெறுகின்ற ஒரு போராட்டமாக இருக்கின்ற காரணத்தினால் அந்தப் போராட்டத்துக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும்.

காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினையை இந்த அரசாங்கம் கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கின்றபோது உள்நாட்டு முறைமை இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. கடந்த கால ஜனாதிபதிகளினால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு முன்வைக்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் உள்நாட்டு முறை உதவாத முறை, எனவே சர்வதேச நீதி விசாரணை மூலமாகத்தான் இந்த பிரச்சினையை அணுக வேண்டும் என்பதைத்தான் நாம் தெரிவிக்கின்றோம். ஆனால், தற்போதைய அரசாங்கம் தெரிவிக்கிறது… கடந்த அரசாங்கங்களைப் போல் அல்லாமல் நாம் நியாயமான அடிப்படையில் செயற்படுவோம் என்று. செம்மணியில் புதைகுழியில் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் இருக்கின்றன. இன்னும் எலும்புகள் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. நிச்சயமாக செம்மணியில் கொல்லப்பட்ட நபர்களுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் நீதி நிலைநாட்டப்படும் என இந்த அரசாங்கம் கூறியிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்கவை விட மிகவும் மோசமான ஊழல் செய்த முன்னாள் ஜனாதிபதிகள் கைது செய்யப்படவில்லை. சிறு குற்றம் செய்தவர்களை கைது செய்திருக்கிறார்கள், பெரிய குற்றம் செய்தவர்களை கைது செய்யவில்லை.

அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்திருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனினும் ரணில் விக்கிரமசிங்கவை விட மிகவும் மோசமாக மோசடிகளையும் ஊழல்களையும் வன்முறைகளையும் செய்த ஜனாதிபதிகள் இருக்கின்றார்கள். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கைது செய்யப்பட்டால், அவரை விட மிக மோசமாக குற்றங்களை செய்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்டால் தான் இவர்கள் உண்மையில் சட்டத்தை பின்பற்றுகிறார்கள் என்பதை நம்பக்கூடியதாக இருக்கும். இல்லையேல், இதனை அரசியல் பழிவாங்கல் என மக்கள் கூறுவார்கள்.

நாங்கள் வடகிழக்குக்குரிய அதிகாரத்தைத்தான் கேட்கின்றோம். அந்த அதிகாரங்கள் கிடைத்தால் வடகிழக்கிலே காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுகொள்வோம். இப்போது சகல அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்துடன் குவிந்து காணப்படுகின்றன. மத்திய அரசுதான் அந்த அதிகாரங்களை செய்து கொண்டிருக்கின்றது. மத்திய கிழக்கில் ஒட்டகங்கள் அதிகரிக்கின்ற போது ஒட்டகங்களை சுட்டுக்கொல்கின்றார்கள். அவுஸ்திரேலியாவில் கங்காரு அதிகரிக்கப்படும்போது கங்காருகளை சுட்டுக் கொல்கின்றார்கள். மேலதிகமாக விலங்குகள் இருந்தால் அது மனித குலத்திற்கு ஆபத்தாக அமையும் என அவர்கள் அவ்வாறு கொன்றுவிடுகின்றார்கள். அதுபோல்தான் இலங்கையில் ஆயிரம் யானைகள் வாழக்கூடிய காடுகள் இருந்தும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் வாழ்கின்ற காரணத்தால் காடுகள் கொள்ளாத இடத்து ஊர்களுக்குள் யானைகள் வருகின்றன. இந்த யானைகளை கட்டுப்படுத்துவதற்கு மேலதிகமான யானைகளையாவது கொன்றொழிப்பதற்கு ஏன் முடியாது என நான் கேட்டிருந்தேன்.

யானைகளை கொன்றுவிடுவதற்கு உரிய நோக்கம் எம்மிடம் இல்லை. யானை வேலிகளை அமைத்து தருவோம் என அமைச்சர் தெரிவித்திருந்தார். எனவே சில அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் இருப்பதினால் அந்த அதிகாரங்களை நாங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனது மாகாணத்திற்குரிய அதிகாரம் இருக்குமாக இருந்தால் எமது மக்களுக்கு உரிய ஆபத்து வருமிடத்து அதற்குரிய பதிலீடுகளை எம்மால் வழங்க முடியும்.

எனவே அதிகாரங்கள் எமது கையில் இருக்கும் பட்சத்தில் கிராமங்களுக்குள் புகுந்து மக்களையும் பயிர்களையும் சொத்துக்களையும் துவம்சம் செய்யும் யானைகளை நாங்கள் கட்டுப்படுத்தலாம். எனவே, இவ்வாறான விடயங்களில் தமிழரசு கட்சிக்கு விடயங்களை கையாள்வதற்குரிய அதிகாரங்கள் இல்லாமல் உள்ளது. நாங்கள் இவ்விடயம் தொடர்பில் மத்திய அரசாங்கத்திடம் தெரிவிக்கவே முடியும். அதிகார பகிர்வு மூலமாகத்தான் இங்கே அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட்டால் இதனை இவ்வாறான விடயங்களை நாங்கள் கைக்கொள்ள முடியும்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, பாராளுமன்றத் தேர்தலில் வடகிழக்கிலே அவர்கள் பெற்ற வாக்கு வடகிழக்கில் தற்போதைய அரசாங்கத்திற்கு குறைந்திருந்தன. அந்த அச்சம் காரணமாக சில வேளைகளில் அவர்கள் மாகாண சபை தேர்தலை இழுத்தடிக்கின்றார்களோ என தெரியாதுள்ளது. எனினும் வருகின்ற ஆண்டு முதல் ஆறு மாதத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடாத்துவோம் என இந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசாங்கங்களும் எதிர்க்கட்சியில் இருக்கின்றபோது பேசுகின்ற பேச்சும் ஆளும் கட்சிக்கு வந்தபோது பேசுகின்ற பேச்சும் வித்தியாசமாய் இருக்கின்றன. தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருக்கின்றபோது மாகாண சபை தேர்தலை நடத்தச் சொன்னார்கள். இப்போது ஒரு பிரச்சினையும் இல்லை. பழைய தேர்தல் முறையில் விகிதாசார தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. தேர்தலுக்கான நடைமுறையை மாற்றுவது என்று சொல்லிக்கொண்டிருந்தால் இவர்களுக்கும் மாகாண சபை தேர்தலில் விருப்பமில்லை என்பதுதான் புலனாகின்றது. ஆகவே உள்ளூராட்சி சபை தேர்தலில் வடகிழக்கு கிழக்கில் அவர்களுக்கு ஏற்பட்ட வாக்குச் சரிவால் சில வேளைகளில் மாகாண சபை தேர்தலை கண்டு அவர்கள் பயப்படுகின்றார்களோ என எண்ணத்தோன்றுகிறது. இருந்தும் அதற்குரிய அழுத்தங்களை நாங்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

 

 

பகிரவும்...
0Shares