Main Menu

நீரிழிவு நோயால் ஏற்படும் காயங்களுடன் 100,000 பேர் நாட்டில்

காயம் ஏற்பட்ட நீரிழிவு நோயாளிகள் சுமார் ஒரு இலட்சம் பேர் தற்போது நாட்டில் இருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரத்த நாளங்கள் தொடர்பான விசேட அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ரெஸ்னி காசிம் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து இதனைக் குறிப்பிட்டார்.

நீரிழிவு நோயாளிகளின் காயங்கள் புற்றுநோயை விடவும் கொடூரமானவை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நீரிழிவு நோயாளிகளின் பாதங்களில் ஏற்படும் ஒரு சிறிய காயத்தின் காரணமாகவும் கூட, பாதத்தை வெட்டி அகற்ற வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவது அரிதல்ல என்று குறிப்பிட்டார்.

அதேபோல், நீரிழிவு நோய் காரணமாக ஒரு கால் இழந்தால், அவர்களில் 30% மானோருக்கு மூன்று வருடங்களுக்குள் மற்றைய காலும் இழக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் அவர் மேலும் கூறினார்.

அங்கு மேலும் உரையாற்றிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரத்த நாளங்கள் தொடர்பான விசேட அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ரெஸ்னி காசிம்,

“நீரிழிவு காயங்கள் ஏற்படும் வாய்ப்பு சுமார் 20 சதவீதம் ஆகும். அதாவது, நூறு பேருக்கு சர்க்கரை நோய் இருந்தால், இருபது பேருக்கு இந்தக் காயம் ஏற்படலாம். இவ்வாறான பிரச்சினை வந்தால், ஒருவரின் கால் அகற்றப்படுவது 15 மடங்கு, 30 மடங்கு அதிகம். ஆனால், இவ்வாறு அகற்றப்படும் கால்களில் 85% முதல் 90% வரையானவை ஒரு சிறிய பாதக் காயத்திலிருந்தே தொடங்குகின்றன.

அதற்குக் காரணங்கள் பல உள்ளன. சர்க்கரை நோயின் காரணமாக இரத்த ஓட்டம் சரியாகச் செல்லாது. நரம்புகள் சரியாகச் செயல்படாது. அதுமட்டுமல்லாமல் கல்சியம் உருவாகிறது. இலங்கையில் குறைந்தபட்சம் இரண்டு மில்லியன் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். வருடத்திற்கு நாற்பதாயிரம் புதிய காயங்கள் ஏற்படுகின்றன. இந்தக் கணத்திலும் கூட, ஒரு இலட்சம் பேர் நீரிழிவு காயங்களுடன் இலங்கையில் உள்ளனர். இந்தக் காயங்கள் ஒவ்வொன்றும் கால் இழப்பு ஏற்படும் நிலைமைக்குச் செல்ல முடியும்.

அப்படியெனில், இந்தக் ‘காயம் ஏற்பட்ட நீரிழிவு’ நோயை நாம் ஏன் புற்றுநோய் போன்றது என்று நினைக்கிறோம்? இரண்டிலும் சிறிய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் நீண்ட காலத்திலேயே ஏற்படுகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன. உயிரை இழக்கவும் நேரிடலாம்.

அனைத்துப் புற்றுநோய்களையும் சேர்த்தாலும், 30% மானோரே ஒரு வருடத்திற்குள் இறக்கின்றனர். ஆனால், எங்கள் வைத்தியசாலையின் புள்ளிவிவரப்படி, கால் அகற்றப்பட்ட நோயாளிகளில் 35% மானோரே நான்கு வருடங்களுக்குப் பிறகு உயிர் பிழைத்திருந்தனர். அதாவது, கால் அகற்றப்பட்ட பின்னர் மூன்றில் இரண்டு பங்கு உயிர்கள் இழக்கப்படுகின்றன. நீரிழிவு காயம் காரணமாக ஒரு கால் இழந்தால், 30% மானோருக்கு மூன்று வருடங்களுக்குள் மற்றைய காலும் அகற்றப்படுகிறது. 66% மானோருக்கு ஐந்து வருடங்களுக்குள் மற்றைய கால் அகற்றப்படுகிறது.

அதாவது, இதை ஒரு புற்றுநோயுடன் ஒப்பிட்டால், கணையப் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவற்றைத் தவிர மற்றெல்லா புற்றுநோய்களும் இதைவிடச் சிறந்தவை (குறைவான ஆபத்து கொண்டவை).” என்றார்.

பகிரவும்...
0Shares