நிறைவேற்றப் பட்டது ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை இரத்து செய்யும் சட்டமூலம்

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.இச்சட்டமூலத்திற்கு எதிர்கட்சி பக்கத்திலிருந்து எதிராக சாமர சம்பத் தசநாயக்கவும் ஆதரவாக அர்ச்சுனா இராமநாதனும் மட்டுமே வாக்களித்தனர்
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதம் காலை 11 மணிமுதல் மாலை 3.30 மணிவரை இடம்பெற்றது. இதனையடுத்து சட்டமூலத்தை நிறைவேற்ற சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வாக்கெடுப்பைக்கோரினார்
அதனையடுத்து வாக்கெடுப்புக்கான ”கோரம்” மணி ஒலித்த நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையிலிருந்து வெளியேறி சென்றனர். ஆனால் எதிர்க்கட்சியின் புதிய ஜனநாயக முன்னணி எம்.பி.யான சாமர சம்பத் தசநாயக்கவும் சுயேட்சைக்குழு 17 இன் யாழ்மாவட்ட எம்.பி.யான அர்ச்சுனா இராமநாதனும் சபையில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் இலத்திரனியல் முறையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.இதில் ஆதரவாக அரச தரப்புடன் இணைந்து யாழ்மாவட்ட எம்.பி.யான அர்ச்சுனா இராமநாதன் வாக்களித்த நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.யான சாமர சம்பத் தசநாயக்க எதிராக வாக்களித்தார். இதன் அடிப்படையில் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்தற்கான சட்டமூலம் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்புக்கமைய இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டது.
1986 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டத்தை இரத்துச் செய்யும் பொருட்டு இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டம் இந்த சட்டமூலத்தின் ஊடாக இரத்துச் செய்யப்படும்.
இரத்துச் செய்யப்படும் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு வழங்கப்படும் ஏதேனும் வீடு அல்லது செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு,
இரத்துச் செய்யப்படும் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு செலுத்தப்படும் செயலாளருக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வேறு சகல வசதிகள் இரத்துச் செய்யப்படும் சட்டத்தின் 4ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு என்பன நிறுத்தப்படும்.
பகிரவும்...