Main Menu

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற 77 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது.

திருகோணமலை

திருகோணமலையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையான க்ரீன்விச் பாடசாலையானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வை வெகு விமர்சையாக கொண்டாடியது.

இதன்போது, ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து இலங்கையின் வரைபடத்தை மிகவும் துல்லியமாகவும் பிரமாண்டாகவும் காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இத்தினத்தை கொண்டாடும் விதமாக வீதியில் சென்ற வாகனங்களுக்கு இலங்கையின் தேசிய கொடியை ஒட்டி தங்களின் தேசப்பற்றை வெளிக்காட்டினர்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், உப அதிபர் , ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ். மாவட்ட செயலர் அணிவகுப்பு மரியாதைகளை தொடர்ந்து 08.04 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து , மதகுருமார்களின் ஆசியுரை இடம்பெற்று , மாவட்ட செயலரின் உரை நடைபெற்றது.

நீர்கொழும்பு

நீர்கொழும்பு ஜம்மியத்துல் உலமா கிளையின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.

நீர்கொழும்பு அஹமதியா முஸ்லிம் ஜமாத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் 77 வது சுதந்திர  தின நிகழ்வு பள்ளிவாசல் முன்றில் நடைபெற்றது.

நீர்கொழும்பு ஜமாத்தின் தலைவர்  ஐ.ஏ. அஸ்லம் ஷாஹிப் தலைமையில் நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில்  தலைவரினால் தேசியக்கொடி  ஏற்றப்பட்டது. பின்னர் தலைவர் உரையாற்றினார்.

தொடர்ந்து  நாட்டின் நலனுக்காக துஆ பிரார்த்தனை நடைபெற்றது.

வவுனியா

வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையான முறையில் மூவின கலாசார பாரம்பரியத்துடன், இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.

மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் குறித்த நிகழ்வானது காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றதுடன்,  தேசியக் கொடியினை அரசாங்க அதிபர் ஏற்றி வைத்திருந்தார்.

இதன்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் தமிழ் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களிற்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து தமிழ் சிங்கள முஸ்லிம் கலாசாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கலாசார ஆடைகளுடன் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி 

இலங்கையின் 77ஆவது சுகந்திரதின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் கொண்டாடப்பட்டது.

பாண்ட் வாத்திய இசை அணிவகுப்புடன் உத்தியோகத்தர்கள் அழைத்து வரப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன.

குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்-முரளிதரன் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார் 

‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின்   77 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.

அதற்கு அமைவாக சுதந்திர தின நிகழ்வுகள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமாதான புறா பறக்கவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றது.

கல்முனை

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக,  கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத்  தலைமையில் அதிகாரிகள்,  ஆசிரியர்கள், மாணவர்கள்  இணைந்து மரியாதையுடன் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

இலங்கைத் திருநாட்டை கடந்த 77 வருடங்களுக்கு முன்னர் போத்துக்கீசர் , ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சிப் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு இதுபோன்ற ஒரு தினத்திலேயே எமக்கு இந்த சுதந்திரம் பெற்றுத்தரப்பட்டது என்பது தொடர்பாகவும் அதற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றிய வரலாறுகளும் அதிபரினால்  நினைவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

யாழ்ப்பாணம்

இலங்கையின் 77வது சுதந்திரதின நிகழ்வு இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் முன்றலில் “தேசிய மறு மலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்னும் கருப்பொருளில் சிறப்பாக நடைபெற்றது.

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அணிவகுப்பு மரியாதை முன்னே செல்ல,  மாவட்ட செயலாளர், பதவிநிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், இராணுவ, பொஸில், கடற்படை, விமான படை அதிகாரிகள், பொதுமக்கள் மாவட்ட செயலக முன்றலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர்  08.10 மணியளவில் தேசியக் கொடியினை யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தேசியகீதம் பாடப்பட்டு, பின்னர் மாவட்ட செயல கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி அவர்களால் ஆற்றிய சுதந்திரதின செய்தி காணொளி மூலமாக ஒளிபரப்பப்பட்டது.

பின்னர் சர்வமத ஆசியினை தொடர்ந்து ஜனாதிபதியின் சுதந்திரதின வாழ்த்து செய்தியினையும், யாழ். மாவட்ட முன்னேற்ற வாழ்த்துச் செய்தியினையும் யாழ். மாவட்ட  பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் வாசித்தார்.

இதில்  யாழ். மேலதிக அரசாங்க அதிபர் (காணி) செ.ஸ்ரீமோகனன், யாழ். மாவட்ட பிரதி பொஸில் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, யாழ்ப்பாண மாவட்ட முப்படைகளின் கட்டளை தளபதிகள், பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சாரண மாணவர்கள், ஊடகவியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நுவரெலியா

எமது நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நுவரெலியா, தலவாக்கலை கிறேட்வெஸ்டன் பாடசாலையில் சுதந்திர தின நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ் தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன்போது பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ், பிரதி அதிபர் இளங்கோ, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

முல்லைத்தீவு

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காலை 7.45 மணிக்கு முல்லைத்தீவு நகர மையத்தில் உண்ணாப்பிலவு றோமன் கத்தோலிக்க மகளீர் பாடசாலை மாணவிகளின் பாண்ட் வாத்திய அணிநடையுடன் மாவட்ட செயலக முன்றலுக்கு உத்தியோகத்தர்கள் அழைத்துவரப்பட்டு காலை 8.04 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து 8.10 மணிக்கு அரசாங்க அதிபரினால் தலைமையுரை நிகழ்தப்பட்டது. குறித்த உரையில் இன மத பேதமின்றி தேசத்தை கட்டியெழுப்பிடவும் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வறுமையைப் போக்கிடவும் அனைவரும் வினைத்திறனாக  செயலாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து காலை 8.25 ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க அவர்களின் 77 ஆவது சுதந்திரதின சிறப்புரையினை காணொளியாக அனைத்து உத்தியோகத்தர்களும் மாவட்ட செயலக  பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பார்வையிட்டனர்.

மேலும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட முதியவர்கள் எட்டுப் பேருக்கு கண்வில்லைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இறுதியாக மாவட்ட செயலக வளாகத்தில் மரநடுகைத் திட்டத்தை ஆரம்பித்ததுடன் சுதந்திரதின நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மாவட்ட செயலகத்தின் ஓய்வுநிலை பிரதம கணக்காளர், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பகிரவும்...