தெற்கு பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு
தெற்கு பிலிப்பைன்ஸில் பாசிலானில் 350 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
எம்.வி. த்ரிஷா கெர்ஸ்டின் 3 (MV Trisha Kerstin 3) என்ற பயணிகள் கப்பல், ஜாம்போங்கா நகரத்திலிருந்து தெற்கு சுலுவில் உள்ள ஜோலோ தீவுக்கு சென்று கொண்டிருந்தது.
திங்கள்கிழமை அதிகாலை, பயணம் ஆரம்பமான சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, கப்பல் அபாய சமிக்ஞை அனுப்பியுள்ளது..
பின்னர் பாசிலான் மாகாணத்தில் உள்ள பாலுக்-பாலுக் தீவு கிராமத்துக்கு அருகே, படகு மூழ்கியதாக கடலோர காவல்படை தெரிவித்தது.
இதன்போது இந்த கப்பலில் 332 பயணிகளும் 27 பணியாளர்களும் இருந்தாக கூறப்படுகிறது.
இதுவரை 316 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 28 பேர் இன்னும் காணாமற்போயுள்ளதாகவும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்பு பணிகளுக்காக கடலோர காவல்படை விமானம், கடற்படை மற்றும் விமானப்படை உதவியும் அனுப்பப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பாசிலான் தலைநகர் இசபெலாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
