தென்கொரிய வேலைவாய்ப்பை பெற்றவர்களின் தொகை 3,000 ஐ அண்மிக்கிறது

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,927 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவில் 100 யுவதிகளும் அடங்குவதாக அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, உற்பத்தித் துறையில் 2,197 இலங்கையர்களும், மீன்பிடித் துறையில் 680 பேரும், கட்டுமானத் துறையில் 23 பேரும், விவசாயத் துறையில் இரண்டு பேரும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், தென் கொரியாவில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ள மேலும் 200 இலங்கையர்களை இந்த மாத இறுதிக்குள் தென் கொரியாவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த மாத இறுதி வரை கொரிய வேலை வாய்ப்புக்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டும் என எதிர்பார்ப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2025 கொரிய மொழித் தேர்வுக்கான பரீட்சைக்காக 36,475 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளதாகவும், அந்த பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
பகிரவும்...