தற்போதைய ஜனாதிபதியாவது புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனை நிறைவேற்றுவார் என எதிர் பார்க்கின்றோம் – முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு அன்று நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாடு பாரியளவில் முன்னேற்றமடைந்திருக்கும். தற்போதைய ஜனாதிபதியாவது அதனை நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்காகக் கொண்டு கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு மஹரக இந்திரா புற்றுநோய் ஒழிப்பு அமைப்பிற்கு நிவாரணங்களை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (18) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க புதிய அரசியலமைப்பினை உருவாக்கி தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தமையை இன்று பலரும் மறந்துள்ளனர். இதற்காக 21 கூட்டங்களை அவர் நடத்தியிருக்கின்றார். அவற்றில் நானும் பங்கேற்றிருக்கின்றேன். அந்த அரசியலமைப்புக்கு எந்தவொரு அரசியல்வாதியும் எதிர்ப்பினை வெளியிடவில்லை.
அன்று அந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று நாடு எந்த நிலைமையில் இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க முடியும். அவ்வாறான புரட்சிகரமான மாற்றத்தை பொருளாதார மற்றும் சமூக ரீதியில் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் அந்த முயற்சி நிறைவேறாது போனமை எமது நாட்டின் துரதிஷ்டமாகும். புதிய ஜனாதிபதி தற்போதாவது அதனை செய்வார் என்று நம்புகின்றோம் என்றார்.
இதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் எனது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தவராவார். அன்று உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்காக இந்த நிகழ்வு வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளர்களில் அதிகளவில் பாதிக்கப்படுவது புற்று நோயாளர்கள் என்பதால் தான் இந்த வைத்தியசாலையை தேர்ந்தெடுத்திருக்கின்றோம்.
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் நானும் புற்று நோய்க்குள்ளாகி அதிலிருந்து மீண்டிருக்கின்றேன். அந்த வகையிலேயே நாம் இணைந்து இந்த பணியை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். பல தசாப்தங்கள் அரசியலில் ஈடுபட்டு தற்போது அதனை வெறுத்து அதிலிருந்து ஒதுங்கியுள்ளோம். அரசியலிலிருந்து ஓய்வெடுத்த பின்னர் நானும் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவும் மாத்திரமே மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
எமது நிதியங்களில் சுயமாக வந்து பணியாற்றுவதற்கு சகலருக்கும் வாய்ப்புள்ளது. நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிலிருந்து மீண்டு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்புவதற்கான பணிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.
பகிரவும்...