தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அரசியல் நல்லெண்ண சமிக்ஞைகளை NPP இதுவரை வெளியிடவில்லை -பேராசிரியர் ரகுராம்

ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு ஆக்கபூர்வமான அல்லது மனச்சுத்தியுடனான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என பேராசிரியர் ரகுராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப்பேருரையை ஆற்றிய பேராசிரியர் ரகுராம் இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு எங்களின் மிக முக்கியமான பிரச்சினைகளாகயிருக்கின்ற வலிந்து காணாமலாக்கபட்டோர்,தொடர்பான நிலை, படைகளிடம் கையளிக்கப்பட்டோர் தொடர்பான நிலை,பற்றிய வெளிப்படையான பிரகடனம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினாலே வெளிப்படுத்தப்படவேண்டும்.
இன்றைக்கு மீதமாகவுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள பேராசிரியர் ரகுராம் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்தபோது கொழும்பிலிருந்து குமார் பொன்னம்பலம் ஆற்றிய பணிகள் மாத்திரமல்ல,போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற ஆரம்ப காலகட்டங்களிலும், அந்த போராட்டத்தினுடைய நேர்மையை தாற்பரியத்தை உணர்ந்தவராக அவர் ஆற்றிய பணிகளும் எடுத்த முடிவுகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
குறிப்பாக அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக கொழும்பிலே விடுதலைப்போராட்டத்தை மிக நியாயத்துடன் உச்சகுரலிலே எடுத்துச்சொல்லி,அந்த நியாயத்தை உலகெங்கும் பரப்புவதற்கும் விடுதலைப்போராட்டத்திற்கு தன்னால் இயன்ற தார்மீக அந்தஸ்த்தை பெற்றுதருவதிலும் அவர் முனைப்புடன் செயற்பட்;டுள்ளார்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் நாங்கள் வன்னிப்பகுதியில் ஊடகத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது,அவருடைய பேச்சுக்கள் அவர் அளிக்கின்ற விளக்கங்கள் எல்லாம் எமக்கு கிடைக்கின்ற போது அவரை பற்றிய மிகப்பெரிய பிரமிப்பு எங்களிற்கு ஏற்பட்டது.
சாதரணமாக அரசியல்வாதிகள் தமிழ் தலைவர்கள் என சொல்லப்படுபவர்கள் அவ்வாறான சூழலிலே எப்படி செயலாற்றவேண்டும்எப்படி தங்கள் குரல்களை வெளிப்படுத்தவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக குமார்பொன்னம்பலம் விளங்கினார்.
உண்மையில் இன்று மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் நினைவுப்பேருரையை ஆற்றுவதற்கு எனக்கு அழைப்பு கிடைத்தபோது.எனக்குள் என்னுடைய வாழ்க்கையிலே முதல் தடவையாக 1982 ம் ஆண்டு எனது 9 வயதிலே சந்தித்த முதலாவது அரசியல்வாதி அவர்தான் என்ற நினைப்பு எழுந்தது.
திருகோணமலையிலே எங்கள் குடும்பம் வாழ்ந்துகொண்டிருந்தபோது 82ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் திருகோணமலைக்கு வந்திருந்தார்.
அப்போதுதான் அவரை நான் முதலில் பார்த்தேன். எனது வாழ்க்கையில் நான் கண்ட முதலாவது அரசியல்வாதி அவர்தான்.அப்படி அறிமுகத்தை தந்தவரின் 25வது ஆண்டு நினைவுதினத்தில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்த காலப்பொருத்தத்தை நான் எண்ணிப்பார்க்கின்றேன்.
இன்று மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுகளை நாங்கள் மீட்டுக்கொண்டிருக்கின்றபோது , அவர் தனது பிரதிநிதித்துவத்தை, ஒரு போராட்டம் மிக வேகமாக தியாகங்களுடன் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது பொதுமகனாகயிருந்து மக்கள் பிரதிநிதியாகயிருந்து தனது கடமைகளை செய்தார் என்பதை இன்றைக்கு இந்த வரலாற்று சந்திப்பிலே இன்றைய பொழுதுகளில் நாங்கள் மீட்டிப்பார்க்கவேண்டியுள்ளது.
அந்த வகையிலேதான் எனது நினைவுப்பேருரையை மக்கள் மயப்படுத்தவேண்டிய அரசியல் என்ற தலைப்பிலே நான் நிகழ்த்தவுள்ளேன்.
இந்த நினைவுப்பேருரையிலே ஐந்து விடயங்களை நான் முக்கியமாக தொட்டுச்செல்லலாம் என நான் நினைக்கின்றேன்.
ஒன்று தமிழ் மக்களுடைய ஈழத்தமிழ் மக்களுடைய அடிப்படை கோரிக்கைகள்,அவற்றை பற்றிய புரிதல்கள் எண்ணக்கருக்கல் முதலாவதாகவும்,
இரண்டாவது எங்களிற்கு தற்போது பேசுபொருளாக மாறியிருக்க கூடிய அரசியலமைப்பு நகல்வடிவத்தில் காணப்படும் பிரச்சினைகள் பற்றியும்,இதற்கு மாற்றாக நாங்கள் முன்னெடுக்கப்படுவதாக பரிந்துரைத்து ,பார்க்ககூடிய தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டம் அது பற்றிய கரிசனைகள் குறித்தும்.
எவ்வாறு இருந்தாலும் இன்றைய பொழுதுகளில் ஈழத் தமிழர்களின் மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு ஆட்சியில் இருக்ககூடிய தேசிய மக்கள் சக்தி,ஜேவிபியின் பார்வை அவர்களுக்கு
ஊடாக நாங்கள் பெறக்கூடிய சாத்தியங்கள் குறித்தும்,அதன் ஊடாக மக்கள் மயப்படுத்தவேண்டிய ஈழத்தமிழர் அரசியலை ,தேர்தல்களிற்கு அப்பால், அரசியல் கட்சிகளிற்கு அப்பால் கட்டமைக்கப்படவேண்டிய அரசியலை,பற்றி பேசுவதாக எனது இறுதி பகுதியும் அமைந்திருக்கும்.
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளிற்கான அடிப்படை கோட்பாடுகளை நாங்கள் இந்த கட்டத்திலே நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டிய ஒரு கடப்பாட்டில் இருக்கின்றோம்.
இன்றைக்கு புதிய அரசாங்கம் பதவியேற்று அதிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றிருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தலிலே மிகக்கணிசமான வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியிலே நீண்டு தொடரும் எங்களுடைய பிரச்சினையை எங்களுடைய போராட்ட வரலாற்றின் தீர்வை நோக்கி நாங்கள் நகரவேண்டுமாகயிருந்தால்,அந்த தீர்விற்காக கொழும்பிலிருந்து வெளிப்படுத்தப்படவேண்டிய சமிக்ஞைகள் குறித்து நாங்கள் மிக கவனமாகயிருக்கவேண்டும்.
வெறுமனே எங்களது கோரிக்கைகளை அபிலாசைகளை நாங்கள் தன்னியல்பாக முன்வைப்பதை விட ,அவ்வாறான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதற்கான கவனத்தில் எடுக்கப்படுவதற்கான ஏதுநிலைகளை கொழும்பிலிருந்து அறிகுறிகளாக சமிக்ஞைகளாக எதிர்பார்த்திருக்கவேண்டிய இடத்திலிருக்கின்றோம்.
இன்றைக்கு பதவியேற்றிருக்ககூடிய தேசிய மக்கள் சக்தி மிகவும் வலுவான கட்டத்திலிருந்தாலும் கூட கொழும்பிலிருந்து கிடைக்ககூடிய செய்திகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது வலுவான பிரதிநிதித்துவம் ஊடாக எதனை சாதிக்கப்போகி;ன்றது என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டேயுள்ளது.
கட்டமைப்பு மாற்றத்தை முன்வைத்து வந்த அரசாங்கத்தினால் அந்த கட்டமைப்பு மாற்றத்தை முழுமையாக எடுத்துச்செல்ல முடியுமா கட்டமைப்பு மாற்றத்தை மேலிருந்து கீழாக எடுத்துச்செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மிகக்குறைந்த காலப்பகுதி தான்அவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது அவர்கள் தங்கள் போக்கினை அல்லது நிருபிக்கவேண்டிய காலப்பகுதி என்பது ஒப்பீட்டளவில் குறுகியது என நாங்கள் சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால் அரசியல் வாழ்வு என்பதும் கடந்தகாலத்தில் ஸ்ரீலங்காஅரசாங்கத்தை ஆண்டுகொண்டிருந்தவர்கள் விட்டுச்சென்ற பாதைகளில் இருந்து மிகவித்தியாசமானவர்களாக அவர்கள் தங்களை காட்டவேண்டிய தேவையிருப்பதை வைத்து பார்க்கும்போதும்,இந்த நாட்கள் மிக முக்;கியமானவையாக உள்ளன.
தனியே தமிழ்மக்கள் மத்தியில் மாத்திரம் அல்லாது தெற்கிலிருந்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது குவிந்திருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான அதீத எதிர்பார்ப்பு தான் அவர்களிற்கான பெரிய அச்சமாகவும் இன்று மாறிவருகின்றது.
ஒரு எதிர்பார்ப்பு என்பது அதி உச்ச அளவிலே இருக்கும்போது,அந்த எதிர்பார்ப்பை எப்படி திருப்தி செய்து கொள்வது என்பதிலே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு முனைப்பான முன்நகர்வை எடுத்து வருவதாக இன்னமும் உறுதிப்படுத்தக்சூடிய தடயங்கள் எங்களிற்கு கிடைக்கவில்லை.
அவ்வாறான பொழுதிலே ஆகக்குறைந்தது ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு அரசியல் நல்லெண்ணத்தை எடுத்துக்காட்டும் முயற்சிகளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
இதுவரைக்கும் அவ்வாறான முயற்சிகள் எங்கள் கண்களிற்கே எங்கள் அறிவுபுலத்திற்கோ தெரிவதாக கிடைக்கப்பெறவில்லை.
குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு ஆக்கபூர்வமான அல்லது மனச்சுத்தியுடனான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும்.
இன்றைக்கு எங்களின் மிக முக்கியமான பிரச்சினைகளாகயிருக்கின்ற வலிந்து காணாமலாக்கபட்டோர்,தொடர்பான நிலை, படைகளிடம் கையளிக்கப்பட்டோர் தொடர்பான நிலை,பற்றிய வெளிப்படையான பிரகடனம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினாலே வெளிப்படுத்தப்படவேண்டும்.
இன்றைக்கு மீதமாகவுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும்.
பகிரவும்...