Main Menu

தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமே கிடையாது என கடற்றொழில் மற்றும் நீரியல் மற்றும் சமுத்திர வள அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நேற்று (26) தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் இணைந்து அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குறிப்பாக, ஒலுவில், கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளுக்கு சென்று மீன்பிடி, கடற்றொழில் மற்றும் கடற்றொழில் அபிவிருத்தியின் தற்போதைய நிலைமைகளை அவதானித்தபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின்  பங்குபற்றலுடன் நேற்று மாலை காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி மேற்கொள்வது தொடர்பாக பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து, அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா இருவரும் ஒலுவில், கல்முனை மற்றும் சாய்ந்தமருது முதலான பகுதிகளுக்கு கள விஜயம் செய்தனர்.

அவ்விடங்களில் மீன்பிடி, கடற்றொழில் மற்றும் கடற்றொழில் அபிவிருத்தி பணிகளின் தற்போதைய நிலைமைகளை பார்வையிட்டனர்.

 

இதன்போது, தமிழர் தனித்துவம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமே கிடையாது என்றார்  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

மேலும், நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் கூறுகையில்,

காரைதீவு மண் மகத்துவம் வாய்ந்தது. சுவாமி விபுலானந்தர் பிறந்த பெருமை உடையது. காரைதீவு என்பது ஒரு வரலாறு. ஒரு வாழ்வியல். இந்த மண்ணில் கால் பதிக்க வேண்டும் என்கிற எனது மிக நீண்ட நாள் அபிலாஷை இன்றுதான் நிறைவேறியுள்ளது.

காரைதீவு பிரதேச மக்களின் பிரச்சினைகளை நாம் மிக நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். காரைதீவு மண்ணின் தனித்துவம் தொடர்ந்து பேணப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும்.

 

நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். ஆனால், தமிழர்கள் தமிழர்களாக வேண்டும். முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ வேண்டும். சிங்களவர்கள் சிங்களவர்களாக வாழ வேண்டும். இதுதான் அழகு. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாடும் மக்களும் வீழ்ச்சி காண வேண்டியிருக்கும் என்று பீதியை காட்டினார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்த வேலைகளை அர்ப்பணிப்போடு மேற்கொண்டு வருவது கண்கூடு.

இந்நாட்டு மக்களின் மனங்களை மாத்திரம் அல்ல. வெளிநாடுகளின் நம்பிக்கையையும் நாம் வென்றிருக்கிறோம். கமிஷன் அரசியல் செய்தவர்கள் நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

நாங்கள்தான் நாட்டை நிமிர்த்திக் கொண்டிருக்கின்றோம். கமிஷன் அரசியல் எங்களிடம் இல்லை. வீண் விரயங்கள் மற்றும் செலவுகள் இல்லை.

எமது ஆட்சியில் இலங்கை ரூபாவின் பெறுமதி ரொம்ப ரொம்ப குறைந்து அமெரிக்க டொலரின் பெறுமதி உச்சபட்சமாக அதிகரித்துவிடும் என்று பொய் பரப்பினார்கள். அவற்றை பொய்ப்பித்திருக்கிறோம். மிகக் குறுகிய காலத்துக்குள் நாட்டை சீராக நடத்திக்கொண்டிருக்கிறோம்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சிந்தனையில் மாணவர்கள், தாய்மார், இளையோர், முதியவர்கள் என்று எல்லோருக்குமான நலன்புரி செயற்றிட்டங்களையும் எமது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

சீனா உட்பட உலக நாடுகள் எமது மக்கள் நலன் சார்ந்த செயற்றிட்டங்களுக்கு பங்களிக்க முன்வந்துள்ளன. மக்கள் நலனே எமக்கு முக்கியம். கடற்றொழில் துறை மேம்படுத்தப்பட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் பெற வேண்டும்.

எதிர்கால சந்ததியினருக்கு நாம் மிகச் சிறந்த கடல் வளத்தை கையளிக்க வேண்டும். கடல் வளம் நாசமாக்கப்படுவதையும் சூறையாடப்படுவதையும் அனுமதிக்க முடியாது. சட்ட விரோத மீன்பிடி நாட்டின் எல்லா இடங்களிலும் இடம்பெற்றுக்கொண்டுதான் உள்ளது. சட்டவிரோத மீன்பிடியை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் பற்றுறுதியுடன் உள்ளது. இதன் மிக முக்கிய அம்சமாக சட்டவிரோத மீன்பிடியை இல்லாமல் செய்வதற்காக புதிய சட்டம் ஒன்றை  விரைவில் கொண்டு வருகிறோம்.

இப்புதிய சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு 5 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட முடியும். இப்பிராந்தியத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை நாம் அறிவோம். அவற்றை தீர்த்துத் தர என்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவை பொதுமக்கள் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். நான் சொன்னபடி, நடந்துகொள்ளாவிட்டால் என்னை நீங்கள் காறி உமிழ்ந்து சிறுமைப்படுத்தலாம் என்றார்.

மேலும், மீனவர்கள் உட்பட பொதுமக்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதற்கான சந்திப்பினை தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் அடங்கலாக கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களையும் அமைச்சர் சந்தித்துப் பேசியமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares