Main Menu

தண்டனைகளிலிருந்து படையினர் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் ; அந்தத் துணிவே நாட்டில் முன்னாள் படைத்தரப்பின் குற்றங்கள் அதிகரிக்க காரணம் – தியாகராஜா நிரோஷ்

நாட்டில் முன்னாள் படையினரால் பாரிய குற்றச் செயல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச இயந்திரமும் இராணுவமும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு எவ்வித  பொறுப்புக்கூறலுமின்றி, சட்டத்தில் இருந்து படையினரை அரசு பாதுகாத்துவரும் துணிவுதான் இந்நிலைமைக்குக் காரணம் என்பதை ஒட்டுமொத்த நாடும் உணர்ந்துகொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக தனது கருத்தினை வெளிப்படுத்துகையிலேயே தியாகராஜா நிரோஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இன்று நாட்டின் நீதிமன்றத்தின் உள்ளே படுகொலை நடக்கிறது. வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியர் அரச  வளாகத்தினுள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக நேர்கிறது. சாதாரணமான துப்பாக்கிப் பிரயோகங்கள் எங்கும் நடக்கின்றன. இவற்றுக்குப் பின் முன்னாள் இராணுவத்தினர் உள்ளனர்.

நாட்டின் பொலிஸ் மா அதிபராக பதவி வகித்தவர் நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளிக்காமல் மறைந்துள்ளார். அவருக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை நாட்டின் பாதுகாப்புத் தரப்பு மற்றும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய பொலிஸ் தரப்பின் தொழில்சார் ஒழுக்கத்தை பகிரங்கப்படுத்தி நிற்கின்றன. படைகளின் தொழில்முகப்படுத்தலில் ஒழுக்கம் இன்மைகளை வெளிக்காட்டுகின்றன.

 

படைகளில் இருந்து விலகியோர் என்று கூறி சாதாரணமாக இந்த விடயங்களை கைவிரித்துவிட முடியாது. படைகளில் பணியாற்றிய மனிதர்கள் உயர் ஒழுக்கம் மற்றும் கட்டளைகளை நிறைவேற்றும் தகுதியை அவர்களது சேவைக்கால பயிற்சி மற்றும் சத்தியப்பிரமாணங்களின் வாயிலாகப் பெற்றிருக்க வேண்டும். இது இலங்கையில் நடைபெறவில்லை. காரணம், தமிழ் மக்கள் மீது படைகளில் இருந்தவர்கள் மேற்கொண்ட அத்தனை பாலியல் வல்லுறவுகள், மிலேச்சத்தனமான படுகொலைகள், சிறார் படுகொலைகள், மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு அரச பாதுகாப்பு அளிக்கப்பட்டதன் விளைவே, இலங்கையில் இராணுவ ஒழுக்கம் மற்றும் பொலிஸாரின் ஒழுக்கம் புகட்டப்படாத குற்றக் கலாசாரத்துக்கான அடிப்படை காரணம் என்பதை அரச இயந்திரம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

பல சந்தர்ப்பங்களில் நாட்டின் ஜனாதிபதிகள், பொதுமன்னிப்பு அதிகாரத்தினை பயன்படுத்திக் கூட தமிழ் மக்களை மிலேச்சத்தனமாக கொலை செய்த படைத்தரப்பினரை குற்றத்துக்கான தண்டனையில் இருந்து பாதுகாத்துள்ளனர்.

இவ்வாறான மனித நாகரிகமற்ற சட்டத்துக்கும் நீதிக்கும் ஏற்புடையதல்லாத கலாசாரம் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் வெற்றியாக அரசும் மாறி மாறி ஆட்சியேறிய அரசாங்கங்களும் கட்டிவளர்த்த கலாசாரம் தான் இன்று நாடே குற்றங்களுக்குள் மூழ்கக் காரணமாக உள்ளன.

 

இந்நிலையில் மக்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்களை, படையினரை அரசாங்கம் பாதுகாக்கக்கூடாது. குற்றங்களுக்கு பொறுப்புக்கூறாத கலாசாரம் ஒருபோதும் குற்றங்கள் மீள நிகழாமையினை உறுதிப்படுத்தாது என தெரிவித்தார்.

பகிரவும்...