ஜூன் 3ஆம் தேதிக்குள் அதிபர் தேர்தல்: தென்கொரியா
தென்கொரியா அதிபர் தேர்தலை ஜூன் மாதம் 3ஆம் தேதி நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
திரு யூன் சுக் இயோலை (Yoon Suk Yeol) அதிபர் பதவியிலிருந்து நீக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை அரசமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதனால் புதிய அதிபரை 60 நாளுக்குள் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அதிபர் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படுவது உறுதிசெய்யப்படும் என்று தென்கொரியா தெரிவித்தது.
புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை திரு ஹான் டக் சூ (Han Duck Soo) தற்காலிக அதிபராகப் பொறுப்பு வகிப்பார்.
வேட்பாளர்கள் மே 11ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும்.
மறுநாள் அதாவது மே 12ஆம் தேதி பிரசாரங்கள் தொடங்கும்.
தென்கொரியாவின் முக்கிய எதிர்த்தரப்புத் தலைவர் லீ ஜே மியூங்கிற்கு (Lee Jae-myung) அதிபராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாகக் கருதப்படுகிறது.
2022ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அவர் திரு யூனிடம் தோல்வியுற்றார்.
பகிரவும்...