Main Menu

செவ்வந்தியின் வாக்குமூலத்தில் வெளிவந்த இரகசியங்கள்: கைபேசியும் மீட்பு

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி, இன்று (18) மேலதிக விசாரணைகளுக்காக மீண்டும் மித்தெனிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கஜ்ஜா என்ற அருண விதானகமகே என்பவரின் கொலை தொடர்பாகவும் பல தகவல்கள் வெளியாகி உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கணேமுல்ல சஞ்ஜீவ கொல்லப்படுவதற்கு முதல் நாள், பெப்ரவரி 18ஆம் திகதி, கெஹெல்பத்தர பத்மேவின் உத்தரவின் பேரில் தானும் ‘கமாண்டோ சமிந்து’ என்பவரும் மித்தெனிய பகுதியில் தங்கியிருந்ததாக இஷாரா செவ்வந்தி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், உடனடியாக கொழும்புக்கு வருமாறு கெஹெல்பத்தர பத்மே விடுத்த அறிவித்தலுக்கு அமைய, அன்றைய தினமே இருவரும் கொழும்புக்கு திரும்பியதாகவும், மறுநாள் (பெப்ரவரி 19) நீதிமன்ற வளாகத்தில் வைத்து கணேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெப்ரவரி 18ஆம் திகதி கஜ்ஜா என்ற அருண விதானகமகேவை கொலை செய்வதற்காகவே கெஹெல்பத்ர பத்மே, செவ்வந்தியையும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் மித்தெனியவுக்கு அனுப்பியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
எனினும், திடீரென மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்படி, சஞ்ஜீவவின் கொலைக்காக அவர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும், வேறு ஒரு தரப்பைக் கொண்டு பெப்ரவரி 18ஆம் திகதி கஜ்ஜா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையில், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பின்னர் தலைமறைவாக இருந்தபோது இஷாரா செவ்வந்தி பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசியை, கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்ற போது, அந்தத் தொலைபேசியை சாரதியிடம் அவர் கொடுத்துள்ளார்.
இந்தத் தொலைபேசியின் மூலம் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘நுகேகொட பபி’ என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குடு சலிந்துவின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்தியா ஊடாக தாம் டுபாய்க்கு தப்பிச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.
அங்கு கெஹெல்பத்தர பத்மேவைச் சந்தித்ததாகவும், அதன் பின்னர் பத்மேவின் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் வலைப்பின்னலுடன் இணைந்து செயற்பட்டதாகவும் பபி காவல்துறையினர் கூறியுள்ளார்.
நுகேகொடை பபியிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், நுகேகொடை – ஜம்புஹஸ்முல்ல பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கையெறி குண்டு மற்றும் 10 துப்பாக்கி தோட்டாக்களை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேநேரம், நேற்றும் அதற்கு முன்தினமும் இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றவிசாரணை பிரிவில் இருந்து அளுத்கம, தொடங்கொட மற்றும் மித்தெனிய ஆகிய பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர், அவரது மனைவியின் தாயார், தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சுபுன் என்பவரின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கெஹெல்பத்தர பத்மேவின் உத்தரவின் பேரில் மத்துகம ஷான் மூலமாகவே, காவல்துறை கான்ஸ்டபிள் மற்றும் தொடங்கொடவைச் சேர்ந்த நபரின் வீடுகளில் செவ்வந்திக்கு அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மித்தெனியவில் சுபுன் வீட்டில் தங்குவதற்கு ‘பெக்கோ சமன்’ அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சஞ்ஜீவ கொலை செய்யப்பட்ட நாளிலேயே இஷாரா செவ்வந்தி, கைதான காவல்துறை கான்ஸ்டபிளின் வீட்டுக்குச் சென்று ஒன்றரை நாட்கள் தங்கியிருந்துள்ளார்.
எனினும், செவ்வந்தி வீட்டை விட்டு வெளியேறும் வரை அவர் யார் என்று தனக்குத் தெரியாது என்று கான்ஸ்டபிள் கூறியுள்ளார்.
இதற்கிடையில், கணேமுல்ல சஞ்ஜீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தியின் சகோதரனை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

பகிரவும்...
0Shares