Main Menu

செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID அதிகாரி

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘கணேமுல்ல சஞ்ஜீவவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு, காவல்துறையின் காவலின் கீழ் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரி ஒருவருக்கு  எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் இன்று (30) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்த தகவலை வெளியிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) நேற்றைய தினம் (29) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.

சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவொன்றின் ஊடாக இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

“காவல்துறை அதிகாரிகள் அரசாங்கத்தின் ஊழியர்கள். அவர்கள் எந்தக் காலத்திலும் குற்றவாளிகளுடன் தொடர்புகளைப் பேண முடியாது. தமது விழுமியங்களையும் பொறுப்புக்களையும் உணர்ந்து கடமையாற்ற வேண்டும்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் காவல்துறை திணைக்களத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல் எனச் சுட்டிக்காட்டியுள்ள காவல்துறை தலைமையகம், தவறிழைக்கும் அதிகாரிகள் எவராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தண்டனை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.