சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாச ரீதியில் கருத்துக்களை முன் வைத்துள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் கோரிக்கை
சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாச ரீதியில் கருத்துக்களை முன்வைத்துள்ளமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே சபை முதல்வர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நிலையியல் கட்டளை 91 (உ) பிரிவுக்கமைய சபையில் உரையாற்றும் மற்றும் சபைக்கு வருகை தந்துள்ள உறுப்பினர் ஒருவரால் அவதூரான வகையிலோ அல்லது முறையற்ற வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தினாலோ சபாநாயகரால் அந்த எம்.பிக்கு அது தொடர்பில் உத்தரவிடப்பட வேண்டும். அவ்வாறு உத்தரவிடும்போது அந்த வார்த்தைகளை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அறிவித்தலையும் விடுக்க முடியும்.
இதேவேளை சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் ஆபாச ரீதியிலான வார்த்தை வன்முறையை இங்குள்ள எம்பியொருவர் மேற்கொண்டுள்ளார் என்று பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நிலையியல் கட்டளை 91 (உ) பிரிவை மீறும் வகையில் குறித்த உறுப்பினர் நடந்துகொண்டுள்ளார். இதனால் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து இந்த நிலையியல் கட்டளைக்கமையவோ அல்லது பொறுத்தமான நிலையியல் கட்டளைக்கு அமையவோ நடவடிக்கை எடுக்குமாறு உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
பகிரவும்...