Main Menu

சுயாதீன நீதித்துறையால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றும், அழுத்தங்களால் பின்னோக்கிச் செல்ல வேண்டாம் என்றும் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். சட்டத்தின் ஆட்சி சுயாதீன நீதித்துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (26)  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இது நாட்டில் அரசியலமைப்பு சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். சுயாதீன நீதித்துறையால் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பக்கசார்பின்றி வெளிப்படை தன்மையுடன் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பமாகும்.

நீதிமன்றம் தொடர்ந்தும் இந்தக் கொள்கையில் நிலைத்திருக்கும் என்று நம்புகின்றோம். நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்க முன்னரே தீர்ப்பு தொடர்பில் பல்வேறு விடயங்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சட்டத்தின் ஆட்சி சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. எவ்வாறிருப்பினும் தற்போது அந்த முயற்சிகள் சுயாதீன நீதிமன்றத்தால் முறியடிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக முன்னிலையான சட்டத்தரணிகள், அவரது விடுதலைக்காக ஒன்று திரண்ட ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி உள்ளிட்ட வெ வ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றும், அழுத்தங்களால் பின்னோக்கிச் செல்ல வேண்டாம் என்றும் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். சட்டத்தின் மூலம் உங்களின் சுதந்திரம், உரிமை பாதுகாக்கப்படும் என நம்புகின்றோம். யாருக்கும் எதற்காகவும் மக்களை அச்சுறுத்த முடியாது என்றார்.

பகிரவும்...
0Shares