Main Menu

சிறுவர்களின் உடல் மற்றும் உளவியல் தண்டனைக்கு முடிவு?

இலங்கையில் சிறுவர்களுக்கு உடல் மற்றும் உளவியல் தண்டனை வழங்குவதை நிறுத்துவதன் அவசியத்தை உறுதியாக நம்புவதாகவும் இருப்பினும், ஒழுக்கத்தைப் பேணுவதற்குத் தண்டனைக்கு மாற்றான வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
சிறுவர்களைத் தண்டிப்பதை நிறுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும்போது, சிறுவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவதற்கான மாற்று வழிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.
உடல் தண்டனையைத் தடை செய்வது பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பாதிக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர்.
ஆனால், ஒழுக்கத்தைப் பராமரிக்க வேறு வழிகள் இல்லையா? மாற்று முறைகள் இருக்கும்போது, இந்த காலாவதியான பழக்கவழக்கங்களைத் தொடர வேண்டியது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளைச் சிறுவர்களுக்கான உடல் தண்டனைக்கு எதிராகச் சட்ட விதிகளைக் கொண்டுவரும் இந்தத் திருத்தச் சட்டமூலம் குறித்து அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உரிமைகளை மேம்படுத்துதல் என்ற திட்டத்திற்காக ஒரு சர்வதேச அமைப்பிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தைப் பெறுவதற்காகவே அரசாங்கம் இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாகக் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் தண்டனைச் சட்டத்தின் அத்தியாயம் 19-ஐ திருத்துவதற்கான இந்த சட்டமூலம், ஆளுகை, நீதி மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலத்தின் நோக்கம், சிறுவர்களை இலக்காகக் கொண்ட உடல் தண்டனை மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் ஒழுக்க நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதும், அத்தகைய செயல்களுக்குச் சட்டரீதியான அபராதங்களை அறிமுகப்படுத்துவதும் ஆகும்.
பகிரவும்...
0Shares