க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதமொன்றை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் க்ளீன் ஸ்ரீலங்கா தொடர்பில் விவாதமொன்றை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள தவறான அபிப்பிராயம் காரணமாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கட்டாயப்படுத்தி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியாது.
இந்த வேலைத்திட்டம் எமக்கும் ஒரு புதிய அனுபவமாக உள்ளது.
இதனைப் புரிந்து கொள்வதற்கு சில காலம் தேவைப்படலாம்.
முறையான புரிதல் இன்மையினால் பலரும் இதனை எதிர்ப்பதுடன் மாற்றுக் கருத்துக்களையும் முன்வைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே, க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள கருத்தாடல் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, இந்த வேலைத்திட்டம் தொடர்பில் பொதுமக்களுக்குத் தெளிவான விளக்கத்தை வழங்குவதற்காக குறித்த விவாதத்தை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.