Main Menu

கோபா அமெரிக்கா கால்பந்து – காலிறுதியில் உருகுவே, சிலி

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

46 ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் 15 முறை சம்பியனான உருகுவே அணி, நடப்பு சம்பியன் சிலியை எதிர்கொண்டது.

இரு அணிகளும் கோல் அடிக்க பலமுறை முயற்சி செய்தாலும் முதல் பாதியில் கோல் எதுவும் கிடைக்கவில்லை. போட்டியின் 82 ஆவது நிமிடத்தில் உருகுவே அணி கோல் அடித்தது. அந்த அணியின் ரோட்ரிக்ஸ் கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை சக வீரர் எடின்சன் கவானி தலையால் முட்டி கோலாக்கினார்.

இறுதி நேரத்தில் கோல் போடப்பட்டதால் அதிர்ச்சியில் உறைந்த சிலி அணி, பதில் கோல் அடிப்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தியது.

தொடரில் உருகுவே அணி 2 வெற்றி, ஒரு சமனிலையுடன் (7 புள்ளிகள்) தனது பிரிவில் முதலிடத்தையும், சிலி அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் (6 புள்ளிகள்) இரண்டாவது இடத்தையும் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

இதே பிரிவில் நடந்த ஜப்பான்-ஈகுவடோர் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிந்தது. இதனால் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தன.

லீக் சுற்று முடிவில் பிரேசில், வெனிசுலா, பெரு, கொலம்பியா, அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே, சிலி ஆகிய அணிகள் காலிறுதிக்குள் நுழைந்தன. பொலிவியா, கட்டார், ஜப்பான், ஈகுவடோர் ஆகிய அணிகள் வெளியேறியுள்ளன.

கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டிகள் நாளை மறுதினம் ஆரம்பமாவதுடன், அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி தொடங்குகின்றன.

தொடரின் இறுதிப்போட்டி, ஜூலை 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...