காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை ஜனாதிபதி காட்ட வேண்டும்

ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார்.
இன்று (28) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மேலும், இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும்போது தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா? இவர்களுக்கு என்ன நடந்தது?
சர்வதேச நீதி நெறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம். குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள் சர்வதேச நீதிப் நெறிமுறைக்காகவே இதுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம்.
இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளம் குழந்தைகளையும், பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள்.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
குறிப்பாக, சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும்.