Main Menu

கனேடிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு ; இனப்படுகொலை மறுப்பை முறியடிக்கும் முக்கிய மைல்கல் அடைவு – தேசிய கனேடியத் தமிழர் பேரவை வரவேற்பு

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் தொடர்பான கனேடிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது, தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை என முன்வைக்கப்படும் மறுப்புக்களை முறியடிப்பதை இலக்காகக்கொண்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்களால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்டுள்ள மிகமுக்கிய மைல்கல் அடைவாகும் என தேசிய கனேடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழினப்படுகொலை மறுப்பாளர்களால் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக கனேடிய உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த வாரம் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அச்சட்டத்தின் பிரகாரம் வருடாந்தம் மே மாதம் 12 – 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலம் ஒன்ராரியோ மாகாணத்தில் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தப்படும்.

தமிழினப்படுகொலை தொடர்பிலும், உலகில் இடம்பெற்ற ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்தவர்கள் அந்த ஒருவாரகாலத்தில் அறிந்துகொள்வதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக தமிழினப்படுகொலை மறுப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு கடந்த வாரம் கனேடிய உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தேசிய கனேடியத் தமிழர் பேரவை, ‘தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை என முன்வைக்கப்படும் மறுப்புக்களை முறியடிப்பதை இலக்காகக்கொண்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்களால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்டுள்ள மிகமுக்கிய மைல்கல் அடைவு இதுவாகும்’ எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை இந்த உயர்நீதிமன்றத்தீர்ப்பு தொடர்பில் பல்வேறு தவறான தகவல்கள் பகிரப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ள அப்பேரவை, குறிப்பாக ‘கனேடிய உயர்நீதிமன்றம் உண்மையை நிலைநாட்டியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை’ எனும் தலைப்பில் வெளியாகியிருக்கும் கட்டுரையில், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை கனேடிய உயர்நீதிமன்றம் நிராகரித்ததாக பொய்யான விடயம் உள்வாங்கப்பட்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளது.

‘தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான கோரிக்கை கனேடிய உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை உயர்நீதிமன்றம் நிராகரித்ததாக குறித்த கட்டுரையில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சட்ட அடிப்படையில் தவறான கருத்து என்பதுடன் கனேடியத் தமிழர்களின் நீண்டகால முயற்சியின் விளைவாகக் குவிந்திருக்கும் அவதானத்தைக் கலைக்கும் செயலாகும்’ எனவும் தேசிய கனேடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

பகிரவும்...