Main Menu

கடல் பாதுகாப்புக்கும் போதைப் பொருள் ஒழிப்புக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்! – பிரதமர்

இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்

தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதுடன் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

இந்தியக் கடல் பரப்பின் கடல்சார் நோக்கு’ என்ற தொனிப்பொருளில் இலங்கை கடற்படையால் 12ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ‘காலி கலந்துரையாடல் 2025 சர்வதேச கடல்சார் மாநாட்டில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது”

பல வருடங்களாக, இந்த கலந்துரையாடல் இந்தியக் கடல் பரப்பின் எதிர்காலம் குறித்த விவாதங்களுக்கான சர்வதேச தளமாக இருந்து வருகின்றது. இந்தியக் கடல் பரப்பானது உலகின் மிகவும் முக்கியமான மூலோபாய நன்மையைக் கொண்ட கடல் பரப்புகளில் ஒன்றாகும்.

இந்தியக் கடல் பரப்பானது அமைதி, பாதுகாப்பு, நிலையான தன்மை, நீதி மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வாகிக்கப்படும் ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதே எமது நோக்கமாகும். நவீன உலகின் கடல் பரப்பானது முன் ஒருபோதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டுள்ளது.

காலநிலை மாற்றம், கடல் மட்ட உயர்வு, அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைதல் ஆகியவை உயிரினப்பன்மை, மனிதப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன. கடல் சூழலைப் பாதுகாப்பது நமது தேசிய இருப்புக்கு இன்றியமையாததாகும், அதனாலேயே நாம் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு, கடல் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றை ஆதரிக்கின்றோம்.

பயனுள்ள கடல்சார் நிர்வாகமும் முக்கியமானதாகும். பாரம்பரிய அச்சுறுத்தல்களுக்கு மேலதிகமாக, இலங்கை போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரம்பரியமற்ற சவால்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அது எமது கடற்படை மற்றும் கரையோரக் காவல்படையின் முக்கிய பணியாக இருந்து வருகின்றது என்பதையும் நான் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.

தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது. அதேபோன்று, போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராட அரசாங்கம் ஏற்கனவே தடுப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தி வருகிறது. போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்களைக் கைது செய்வதற்கான தினசரி ரோந்து சேவை, ஆய்வுகள் மற்றும் புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் நமது மக்களையும் கடல் பரப்பையும் பாதுகாக்க இலங்கை கடற்படை புரியும் அர்ப்பணிப்பைப் பாராட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தியக் கடல் பரப்பில் காணப்படுகின்ற இந்த சவால்களை இலங்கையால் மாத்திரம் தனித்து எதிர்கொள்ள இயலாது. ஆகையினால் பயனுள்ள கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஏனைய நாடுகளின் செயற்பாட்டு ரீதியிலான ஒத்துழைப்பும் அவசியமாகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் ”பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, அட்மிரல் ஒப் த பிளீட் வசந்த கரன்னாகொட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த, இந்திய கடற்படைத் தளபதி தினேஷ் கே திரிபாதி, இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிகோ, விமானப்படைத் தளபதி வாசுபந்து எதிரிசிங்க, கடற்படைத் தளபதி காஞ்சன பானகொட, கடற்படைப் பணிக்குழாம் தலைமை அதிகாரி டேமியன் பெர்னாண்டோ உள்ளிட்ட முப்படையின் அதிகாரிகளும்  கலந்துகொண்டிருந்தனர்.

பகிரவும்...
0Shares