Main Menu

கடன் தொகை செலுத்தாதவரின் வீட்டில் பெயிண்டால் எழுதிய நிதி நிறுவன ஊழியர்கள்… தற்கொலைக்கு முயன்ற நபர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பால கிருஷ்ணன், சக்திவேல். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருவதோடு, ஆடு வளர்த்து விற்கும் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பால கிருஷ்ணன் தனது மகளின் திருமணத்திற்காக ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். 19 மாதம் தவணையாக அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும். 15 மாத தவணை தொகை அவர் சரியாக செலுத்தி உள்ளார். ஆனால் கடந்து 3 மாதங்களாக தவணை செலுத்தவில்லை.

இதே போல சக்திவேல் மற்றொரு நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். அவரும் சரியாக தவணை செலுத்தி வந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை.

இதன் காரணமாக கடன் தொகையை வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியர்கள் பாலகிருஷ்ணன், சக்தி வேலுக்கு சொந்தமான வீட்டில் பெரிய அளவில் இந்த வீடு அடமானத்தில் உள்ளது. 3 மாத நிலுவை ரூ.45,204 செலுத்தப்படவில்லை என்று கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு சென்றுள்ளனர். இதனை கண்ட அந்த கிராம மக்கள் தினம்தோறும் துக்கம் விசாரிப்பது போல அந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்து சென்றுள்ளனர்.

அவமானத்தால் மனமுடைந்த சக்திவேல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தி புத்தி சொல்லி வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்து உள்ளனர். பால கிருஷ்ணனின் மனைவி அவமானம் தாங்க முடியாமல் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பாலகிருஷ்ணன் தற்போது தனது வீட்டிற்கு வராமல் வெளியிலேயே சுற்றி திரிகிறார்.

இது குறித்து சக்திவேல் கூறும்போது, தவணை தொகையை சரியான காலத்தில் செலுத்தி வந்தோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக எங்களது தாயாரின் உடல் நிலை கடுமையான பாதிப்பிற்கு உள்ளானது. இதன் காரணமாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததால், வைத்திருந்த பணம் மருத்துவத்திற்காக செலவிடப்பட்டு விட்டது. 3 மாத தவணையை எப்படியும் செலுத்தி விடுவோம் என்று நாங்கள் பணம் வசூலிக்கும் நிதி நிறுவன ஊழியரிடம் கெஞ்சினோம். ஆனால் அவர்கள் இவ்வாறு எங்களை அவமானப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.

இவ்வாறு அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, தவணை தொகை செலுத்தவில்லை என்றால் நிதி நிறுவனங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இது போன்ற அநாகரீகமான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது. இது மிகவும் தவறு. சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடரலாம் என்று அவர் கூறினார்.

பகிரவும்...
0Shares