தூய எரிசக்தியின் மூலம் எரிசக்தி இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கிடைக்கின்றது. புதைபடிவ எரிபொருள் சந்தைகளை எடுத்துக்கொண்டால், அவை விலை அதிர்ச்சிகள், விநியோக இடையூறுகள் மற்றும் யுக்ரேய்ன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின்போது நாம் கண்டது போல, புவிசார் அரசியல் கொந்தளிப்பு ஆகியவற்றின் தயவில் உள்ளன, ஆனால், சூரிய ஒளிக்கு விலை உயர்வுகள் கிடையாது. காற்றின் மீதான தடைகள் இல்லை. மேலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாடும் சக்தி ஆற்றலில் தன்னிறைவு பெறுவதற்கு போதுமான புதுப்பிக்கத்தக்க வளங்கள் உள்ளன. இறுதியாக, தூய சக்தி அபிவிருத்தியைத் தூண்டுகிறது. இன்னமும் மின்சாரம் இல்லாமல் வாழும் கோடிக்கணக்கான மக்களை இது விரைவாகவும், மலிவாகவும், பேண்தகு முறையிலும் சென்றடையும். குறிப்பாக, ஆஃப்-கிரிட் மற்றும் சிறிய அளவிலான சூரிய சக்தி தொழில்நுட்பங்கள் மூலம் இது சாத்தியமாகும். என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்தார்.
நியூயோர்க்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் காலநிலை மாற்றம் தொடர்பில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ்,
சக்தி, மனிதகுலத்தின் பாதையை வடிவமைத்துள்ளது. நெருப்பை வெற்றிகொள்வது முதல் நீராவியைப் பயன்படுத்துவது, அணுவைப் பிளப்பது வரை மனிதகுலத்தின் பாதையை சக்தியே வடிவமைத்துள்ளது. இன்று, நாம் ஒரு புதிய சகாப்தத்தின் விடியலில் இருக்கின்றோம். தூய சக்தியின் யுகத்தில் சூரியன் உதிக்கின்றது. கடந்த ஆண்டில், கிட்டத்தட்ட அனைத்து புதிய மின் உற்பத்தித் திறனும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்தே கிடைக்கப்பெற்றது. தூய எரிசக்தியிலான முதலீடு 2 ட்ரில்லியன் டொலர்களாக உயர்ந்தது. புதைபடிவ எரிபொருள்களுக்கான முதலீட்டை விட இது 800 பில்லியன் டொலர்கள் அதிகம்.
புதைபடிவ எரிபொருள்கள் கூடுதலான மானியங்களைப் பெற்றுவருகின்றபோதிலும், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்வலுவே இப்போது பூமியில் மிகவும் மலிவான மின்சார மூலாதாரங்களாக உள்ளன. தூய சக்தி துறைகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன, வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன மற்றும் முன்னேற்றத்தை உந்துகின்றன.
புதைபடிவ எரிபொருள்களைப் பற்றிக்கொண்டிருக்கும் நாடுகள் தமது பொருளாதாரங்களைப் பாதுகாக்கவில்லை, அவற்றை நாசமாக்குகின்றன, போட்டித்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. அத்துடன், 21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பொருளாதார வாய்ப்பை இழக்கின்றன.
தூய எரிசக்தியின் மூலம் எரிசக்தி இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கிடைக்கின்றது. புதைபடிவ எரிபொருள் சந்தைகளை எடுத்துக்கொண்டால், அவை விலை அதிர்ச்சிகள், விநியோக இடையூறுகள் மற்றும் யுக்ரேய்ன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின்போது நாம் கண்டது போல, புவிசார் அரசியல் கொந்தளிப்பு ஆகியவற்றின் தயவில் உள்ளன, ஆனால், சூரிய ஒளிக்கு விலை உயர்வுகள் கிடையாது. காற்றின் மீதான தடைகள் இல்லை.
மேலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு நாடும் சக்தி ஆற்றலில் தன்னிறைவு பெறுவதற்கு போதுமான புதுப்பிக்கத்தக்க வளங்கள் உள்ளன. இறுதியாக, தூய சக்தி அபிவிருத்தியைத் தூண்டுகிறது. இன்னமும் மின்சாரம் இல்லாமல் வாழும் கோடிக்கணக்கான மக்களை இது விரைவாகவும், மலிவாகவும், பேண்தகு முறையிலும் சென்றடையும். குறிப்பாக, ஆஃப்-கிரிட் மற்றும் சிறிய அளவிலான சூரிய சக்தி தொழில்நுட்பங்கள் மூலம் இது சாத்தியமாகும்.
இவை அனைத்தும் தூய எரிசக்தி சகாப்தத்திற்கான பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியாததாக ஆக்குகின்றன. ஆனால், இந்த மாற்றம் இன்னமும் வேகமானதாகவோ அல்லது போதுமானதாகவோ இடம்பெறவில்லை. வளரும் நாடுகள் பின்தங்கியுள்ளன. புதைபடிவ எரிபொருள்கள் இன்னமும் எரிசக்தி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன, மேலும், மோசமான காலநிலை நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு குறைய வேண்டியிருக்கும் வாயு உமிழ்வு மென்மேலும் அதிகரித்து வருகிறது. இதனைச் சரிசெய்ய, ஆறு முனைகளில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலாவதாக, அரசாங்கங்கள் தூய எரிசக்தி எதிர்காலத்திற்கு தம்மை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். எதிர்வரும் மாதங்களில், ஒவ்வொரு நாடும் அடுத்த தசாப்தத்திற்கான இலக்குகளுடன் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் என்று அழைக்கப்படும் புதிய தேசிய காலநிலை திட்டங்களைச் சமர்ப்பிப்பதற்கு உறுதியளித்துள்ளன. இத் திட்டங்கள் உலக வெப்பநிலை உயர்வை 1.5 பாகை செல்சியஸாகக் கட்டுப்படுத்தும் இலக்குடன் ஒத்துப்போவதுடன், அனைத்து உமிழ்வுகளையும் துறைகளையும் உள்ளடக்க வேண்டும், அத்துடன், தூய எரிசக்திக்கான தெளிவான பாதை ஒன்றை வகுக்க வேண்டும். உலகளாவிய உமிழ்வுகளில் சுமார் 80% க்கு பொறுப்பான G20 நாடுகள் இதன முன்னின்று வழிநடத்த வேண்டும்.
இரண்டாவதாக, நாம் 21 ஆம் நூற்றாண்டின் எரிசக்தி அமைப்புகளை உருவாக்க வேண்டும். நவீன மின் கட்டமைப்புகள் மற்றும் களஞ்சியப்படுத்தல் இல்லாமல், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் அதன் திறனாற்றலை நிறைவேற்ற முடியாது. ஆனால், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டொலருக்கும், வெறும் சதங்கள் மட்டுமே தற்சமயம் மின் கட்டமைப்புகள் மற்றும் களஞ்சியப்படுத்தலுக்குச் செல்கின்றன. அந்த விகிதம் ஒன்றுக்கு ஒன்று என்பதாக இருக்க வேண்டும்.
மூன்றாவதாக, உலகின் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பூர்த்தி செய்வதை அரசாங்கங்கள் நோக்கமாகக் கொள்ள வேண்டும். பிரதான தொழில்நுட்ப நிறுவனங்களும் இதில் தமது பங்கை வகிக்க வேண்டும். இன்று ஜப்பான் பயன்படுத்தும் அளவு மின்சாரத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் தரவு மையங்கள் நுகரக்கூடும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் அவற்றை இயக்க நிறுவனங்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
நான்காவதாக, எரிசக்தி மாற்றத்தில் நீதியை நாம் இணைக்க வேண்டும். இதன் அர்த்தம் யாதெனில், தூய எரிசக்தி எதிர்காலத்திற்குத் தயாராகும் பொருட்டு, புதைபடிவ எரிபொருட்களை இன்னமும் நம்பியிருக்கும் சமூகங்களுக்கு உதவி வழங்குவதாகும்.. மேலும், முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகள் சீர்திருத்தப்படுவதையும் இது குறிக்கிறது. இன்று, அவை உரிமை மீறல்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழிவுகளினால் நிறைந்துள்ளன, அத்துடன், வளர்முக நாடுகள் மதிப்புச் சங்கிலிகளின் அடிப்பகுதியில் சிக்கியுள்ளன. இது முடிவுக்கு வர வேண்டும்.
ஐந்தாவதாக, வர்த்தகத்தை சக்தி மாற்றத்திற்கான ஒரு கருவியாக நாம் மாற்ற வேண்டும். தூய எரிசக்தி விநியோகச் சங்கிலிகள் பெரிதும் குவிந்துள்ளன, மேலும் உலகளாவிய வர்த்தகம் துண்டாடப்பட்டு வருகிறது. புதிய எரிசக்தி சகாப்தத்திற்கு வாக்குறுதியளித்த நாடுகள், விநியோகங்களை பல்வகைப்படுத்தவும் தூய எரிசக்தி பண்டங்கள் மீதான கட்டணங்களைக் குறைக்கவும் மாற்றத்தை ஆதரிக்கும் வகையில் முதலீட்டு ஒப்பந்தங்களை நவீனமயமாக்கவும் பாடுபட வேண்டும்.
ஆறாவது மற்றும் இறுதியாக, வளர்முக நாடுகளுக்கு நாம் நிதியுதவி அளிக்க வேண்டும். உலகின் மிகச் சிறந்த சூரிய சக்தி வளங்களில் 60% ஆபிரிக்காவிடம் இருந்தபோதிலும், கடந்த வருடம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டில் இரண்டு சதவீதத்தை மட்டுமே ஆபிரிக்கா பெற்றது.
வளர்முக நாடுகளின் வரவு செலவுத் திட்டங்களை வறண்டுபோகச் செய்யும் கடன் திருப்பிச் செலுத்துதலைத் தடுக்கவும் பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகள் தமது கடன் வழங்கும் திறனை கணிசமாக அதிகரிக்கவும் தனியார் நிதியை அதிக அளவில் பயன்படுத்தவும் உதவும் வகையிலான சர்வதேச நடவடிக்கை நமக்குத் தேவை. அத்துடன், சுத்தமான எரிசக்தியின் வாக்குறுதி, காலநிலை கோளாறின் விளைவு மற்றும் சங்கடமான நிலையிலுள்ள புதைபடிவ எரிபொருள் சொத்துக்களின் ஆபத்து ஆகியவற்றை ஈடுசெய்வதற்கு கடன் மதிப்பீட்டு நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் இடர் மதிப்பீடுகளை நவீனப்படுத்த வேண்டும்.
ஒரு புதிய எரிசக்தி சகாப்தம் எட்டக்கூடிய தூரத்தில் உள்ளது. மலிவான, சுத்தமான மிகுதியாகக் கிடைக்கின்ற எரிசக்தியானது பொருளாதார வாய்ப்புகள் நிறைந்த உலகத்தை வலுப்படுத்தும், நாடுகள் எரிசக்தித் தன்னிறைவின் பாதுகாப்பைக் கொண்டிருக்கும், மின்சாரத்தின் பரிசு அனைவருக்கும் ஒரு பரிசாகும். உலகளாவிய மாற்றத்தை வேகப்படுத்துவதற்கான வாய்ப்பின் ஒரு தருணம் ,இதுவாகும். இதனைப் பயன்படுத்திக்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
