ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த யோசனையின் அடிப்படையில், முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை இது குறித்த விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 22 ஆம் திகதி ஊழியர்களுக்கான நிவாரண திருத்தச் சட்டம், தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன.
குறித்த திருத்தச் சட்டங்களை உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின்படி, விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 23 ஆம் திகதி கம்பனிகள் திருத்தச் சட்டம் தொடர்பான விவாதமும், 24 ஆம் திகதி இலங்கை மின்சார சபை திருத்தச் சட்டம் தொடர்பான விவாதமும் நடத்தப்படவுள்ளன.