எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (டிசம்பர் 24) அதிகாலை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) ராமேஸ்வரத்திலிருந்து 383 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்தபோது 2 படகுகளில் இருந்த 17 மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. படகுகளையும் பறிமுதல் செய்தது.
கைதானோர் விவரம்: தங்கச்சிமடத்தைச் சேர்ந்த இருதயம் (59), ஆரோக்கியதாஸ் (44), அந்தோணியார் அடிமை (64), ரோங்கான்ஸியான் (53), முனியாண்டி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெகநாதன் (60), ராமன் (52), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (40) உள்ளிட்ட 8 பேரும், மற்றொரு படகிலிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பூண்டி ராஜ், அமல்ராஜ், கிருபாகரன் (56), அருள் தினகரன் (24), மாதவன் (22), அந்தோணி ஐசக் (19) மற்றும் டேவிட் (50), தங்கச்சிமடத்தைச் சேர்ந்த யாக்கோப் (35), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (27) உள்ளிட்ட 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தலைமன்னார் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தகவல்.
பகிரவும்...