எம்.பி. ஆகக் கூட தகுதியில்லாத அண்ணாமலை! பாஜக தலைவராக இருப்பதா? கனிமொழி
எம்பி ஆகக் கூட தகுதியில்லாத அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக இருப்பதா என தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வென்ற கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தவரை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு வந்த கருணாநிதி, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கு காரணம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விவகாரங்களில் சம்பவ இடத்திற்கே சென்ற கனிமொழி, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளித்தார். தவறை தட்டி கேட்டார்.
இதையடுத்து தூத்துக்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே கனிமொழி தூத்துக்குடியில் வீடு எடுத்து தங்கினார். தொடர்ந்து பிரச்சாரம் செய்த நிலையில் கடந்த 2019 இல் முதல் முயற்சியிலேயே கனிமொழி வெற்றி பெற்றார். அதிலும் பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனை எதிர்த்து போட்டியிட்டு வென்றார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு திமுக வேட்பாளர் கனிமொழி 5,63,143 வாக்குகளையும் தமிழிசை சவுந்திரராஜன் 2,15,934 வாக்குகளையும் பெற்றனர். இந்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடி மக்களின் நம்பிக்கையை பெற்ற கனிமொழி தென் மாவட்ட மழை வெள்ளத்தின் போது இரவு பகல் பாராமல் பணியாற்றி மீட்பு பணிகளையும் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் தூத்துக்குடியில் கனிமொழிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, தமாகா வேட்பாளர் விஜயசீலன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் கனிமொழி 5,40,729 வாக்குகளையும் சிவசாமி 1,47,991 வாக்குகளையும் தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன் 1,22,380 வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி ரவீனா ருத் ஜனே 1,20,300 வாக்குகளையும் பெற்றனர். இதில் டெபாசிட் கிடைக்க வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்குகளில் 3 இல் ஒரு பங்கை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் கனிமொழி தன்னை எதிர்த்து போட்டியிட்ட 27 வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். இந்த வெற்றியை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று ஆசி பெற்றார். தூத்துக்குடியிலும் சென்னையிலும் கனிமொழிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கோவையில் போட்டியிட்ட அண்ணாமலை, எனக்கு (கனிமொழிக்கு) என்ன தகுதியிருக்கிறது என கேட்டுக் கொண்டே இருந்தார். இப்போது நான் அவருக்கு பதில் சொல்கிறேன், எம்பி ஆகக் கூட தகுதியில்லாத அண்ணாமலை பாஜகவின் தலைவராக நீடிப்பது அந்த கட்சியில் நிச்சயமாக நல்லதல்ல.
தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை. இங்கு தாமரை மலராது என்பதை தமிழக மக்கள் தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். நிறைய பேர் கனவுடன் இருந்தார்கள். அந்த கனவெல்லாம் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.
அது போல் கனிமொழி மற்றொரு பேட்டியில், பிரதமர் மோடி தமிழகத்திற்கு எத்தனை முறை வந்தாலும் அவருக்கு தமிழகத்தில் வெற்றி கிடைக்காது. நான் ஏற்கெனவே சொன்னது போல் அவர் இங்கு வீடே எடுத்துத் தங்கினாலும் அவரால் வெல்லவே முடியாது. இந்தியா கூட்டணி தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார். டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் உரிய முடிவை எடுப்பார்கள் என கனிமொழி தெரிவித்திருந்தார்.
பகிரவும்...