Main Menu

எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம்

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

இதன்படி, அன்று பிற்பகல் 3 மணியளவில் ஜனாதிபதி கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பத்தாவது நாடாளுமன்றத்துக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற முறைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக 3 நாட்கள் செயலமர்வை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அரசியலமைப்பு சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் 18ம் திகதி முதல், 20ம் திகதி வரை, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21ம் திகதி காலை 10 மணிக்குக் கூடவுள்ளது.

முதலாவது அமர்வு நாளில் சபை மண்டபத்தில் இடம்பெறும் செயற்பாடுகளில் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கே பிரதான பொறுப்புக் காணப்படுகிறது.

முதலாவது நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.

செங்கோல் சபை மண்டபத்தில் வைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டிய நாள் மற்றும் நேரம் அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வாசிக்கப்படுவது முதலாவது விடயமாக முன்னெடுக்கப்படும்.

அதன் பின்னர் அரசியலமைப்பின் 64(1) உறுப்புரை மற்றும் நிலையியற் கட்டளை இலக்கம் 04, 05 மற்றும் 06 ஆகியவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் சபாநாயகரை நியமித்தல், சபாநாயகரின் பதவிப்பிரமாணம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் என்பன இடம்பெறும்.

நாடாளுமன்றத்தில் உள்ள எந்தவொரு உறுப்பினரையும் சபாநாயகராகத் தெரிவு செய்து நியமிக்க முடியும்.

எனினும், உறுப்பினர் குறித்த முன்மொழிவுக்கு அமையத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த உறுப்பினர் சபாநாயகராகச் சேவையாற்றுவதற்கு விரும்புகின்றாரா? என்பதை முன்கூட்டியே நிச்சயப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

எவராவது உறுப்பினர் ஒருவரின் பெயரைச் சபாநாயகராகத் தெரிவு செய்யுமாறு உறுப்பினர் ஒருவர் முன்மொழிந்து மற்றொருவர் வழிமொழிய வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் விவாதம் மேற்கொள்ள முடியாது.

முதலில் சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் எனச் செயலாளர் நாயகம் சபைக்கு அறிவிக்க வேண்டும்.

இதன்போது எவராவது ஓர் உறுப்பினர் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்றால் குறித்த உறுப்பினரின் பக்கம் செயலாளர் நாயகம் பார்த்து நிற்க அந்த உறுப்பினரின் யோசனை சபைக்கு முன்வைக்கப்படும்.

ஒருவருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வேறு நபர்களின் பெயர்கள் உள்ளனவா? என செயலாளர் நாயகம் சபையிடம் வினவுவது கட்டாயமாகும்.

அவ்வாறு வினவும்போது பிறிதொரு நபரின் பெயர் முன்வைக்கப்பட்டிருக்காவிட்டால் குறித்த உறுப்பினர் சபாநாயகராகத் தெரிவு செய்யப்படுவார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த உறுப்பினரின் பெயரை முன்மொழிந்த மற்றும் வழிமொழிந்த உறுப்பினர்கள் இருவரும் கையில் பிடித்துச் சென்று அவரை அக்கிராசனத்தில் அமர்த்துவது வழமையாகப் பின்பற்றப்படும் சம்பிரதாயமாகும்.

சபாநாயகர் பதவிக்கு இரண்டு உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இதேவேளை, அரசியலமைப்பின் 33(அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் வைபவ ரீதியான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

அதற்கமைய, நாடாளுமன்றத்தின் ஒவ்வோர் கூட்டத்தொடர் ஆரம்பத்தின் போதும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படுகின்றது.

இதன்போது, ஜனாதிபதியினால் அவரது அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கைப் பிரகடனத்தினூடாக நாடாளுமன்றத்துக்கும் மக்களுக்கும் முன்வைக்கப்படும்.

அத்துடன், அரசியலமைப்பின் 70(1) உறுப்புரைக்கு அமைய நடப்பு நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவரும் போது அதுவரை நாடாளுமன்றத்தில் காணப்பட்ட அனைத்து அலுவல்களும் இடைநிறுத்தப்படுவதுடன் குற்றப்பிரேரணை தவிர்ந்த அதுவரை சபையில் இடம்பெற்று வந்த அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

அவ்வாறு கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் புதிய கூட்டத்தொடர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

அவ்வாறு புதிய கூட்டத்தொடர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும் போது ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்படுகின்றது.

1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போது அக்கிராசன உரைக்குப் பதிலாக அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் முறை அமுலுக்கு வந்தது.

முதல்நாள் அமர்வு ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படாத சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

பகிரவும்...
0Shares