உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: உலக நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
கோவிட்19, உலக அளவில் எழுந்த பொருளாதார சவால்கள், பருவநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை உலக நாடுகள் எதிர்கொண்டன. இந்நிலையில், உலகளாவிய சவால்களையும், நெருக்கடிகளையும் நம் நாடு துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது. உலகளாவிய பல நெருக்கடிகளை இந்தியா முறியடித்து முன்னேறி வருகிறது.
உலக அரசியல் மாறி வருவதற்கு ஏற்ப, சில நாடுகளால் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியவில்லை. தொழில்நுட்பம், எரிசக்தி, ராணுவத் திறன், இணைப்பு வசதிகள், வளங்கள் ஆகிய அனைத்தும் இன்று போர்க்கருவிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. கணிக்க முடியாத ஒருவித விநோதமான சூழலில் உலக நாடுகள் பாதுகாப்புக்காக போராடி வருகின்றன.
உலகின் பல நாடுகளில் இல்லாத ஒரு நம்பிக்கை நம் நாட்டில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகள் சிறப்பான நிர்வாகத்தை நாம் அமைத்துக் கொடுத்ததே அதற்குக் காரணம். அடுத்த 10 ஆண்டுகளைக் கடந்தும் அந்த நம்பிக்கை வேரூன்றி இருக்கும். இந்தியா பல்வேறு உலகளாவிய அதிர்ச்சிகளிலிருந்து மீள்திறன் கொண்ட ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதே உண்மை. இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்
