Main Menu

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையை வரவேற்கிறது தமிழரசுக்கட்சி

2020 அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கும் வெளிப்படையான விசாரணைகளை பாராட்டுவதாக தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இந்த வரவேற்பை வெளியிட்டார்.

சுரேஷ் சலே போன்ற உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, விசாரணைகள் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக சாணக்கியன் தெரிவித்தார்.

இந்த விசாரணைகளுக்குத் தமது தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

2021-22 காலப்பகுதியில், வெளியிடப்பட்ட ‘வேட்டை’ என்ற தமிழ் நூல் தொடர்பிலும் சாணக்கியன் கருத்துரைத்தார்.

இந்த நூலுக்கான தகவல்களை ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த கலீல் என்பவர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் ரொஹான் குணரத்னவின் கல்வித் தகைமைகள் மற்றும் அவர் இந்தத் தகவல்களைப் பெற்ற விதம் குறித்து விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தினார்.

காவல்துறை திணைக்களத்திற்குள் இருக்கும் சில குழுக்கள் இந்த விசாரணைகளை தவறான வழியில் கொண்டு செல்ல அல்லது ஆதாரங்களை மறைக்க முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பாக, இஸ்மாயில் இசாக் போன்ற சந்தேக நபர்கள் 2025 செப்டம்பரில் நாட்டை விட்டு வெளியேறி சவுதி அரேபியாவிற்குத் தப்பிச் சென்றதாக சாணக்கியன் குறிப்பிட்டார்.

இராணுவப் புலனாய்வு அதிகாரியாகக் கருதப்படும் ஆதாம் லெப்பை முகமது ரியாஸ் 2018 இல் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பாக அவரது சகோதரர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ரமேஷ் என்ற புலனாய்வு அதிகாரியின் செயற்பாடுகள் மற்றும் முபாரக், வாப்பா ஆகியோரின் மரணங்கள் தொடர்பாகவும் சாணக்கியன் தமது உரையின்போது கேள்வி எழுப்பினார்.

முபாரக் கொல்லப்பட்ட போது அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான தடயங்கள் கூட மறைக்கப்பட்டன.

சாரா ஜஸ்மின் உயிருடன் இருப்பதாக அமைச்சர் முன்னர் கூறியிருந்த போதிலும், தற்போது காவல்துறையினர் அவரது தாயாரிடம் முரணான தகவல்களைக் கூறுவதாக சாணக்கியன் குறிப்பிட்டார்.

சாரா மரணமடையும் போது இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், அவரது உடலை இராணுவத்தினர் அடக்கம் செய்ததாகவும் காவல்துறையினர் கூறியதாக சாணக்கியன் தெரிவித்தார்.

அத்துடன் மரபணு பரிசோதனைகளில் குளறுபடிகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, செனல் 4 வெளியிட்ட ஆவணப்படங்களில் உள்ள தகவல்கள் குறித்தும் அரசாங்கம் முறையான மற்றும் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தனது உரையில் வேண்டுகோள் விடுத்தார்.