Main Menu

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 2017 முதல் திட்டமிடப்பட்ட ஒரு தொடர்ச்சியான சதி! – அமைச்சர் ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது, தனிப்பட்ட சம்பவம் அல்ல, தொடர்ச்சியான சதித் திட்டம், அத்துடன் அது, 2017 ஆம் ஆண்டிலிருந்து திட்டமிடப்பட்ட ஒரு சதித் தொடராகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின்போது, அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் நடந்த பல சம்பவங்கள் இதனுடன் தொடர்புடையவை என்பது விசாரணைகளில் வெளியாகியுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் 13 வது விவாதம் இதுவாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில், நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அனைத்துத் தகவல்களையும் பகிரங்கப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

விசாரணைகளின்படி, சஹாரான் ஹாசிம் தலைமையிலான குழுவினால் இது தொடர்பான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

2018இல் மட்டக்களப்பில் வவுணதீவில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டமை.

2018 டிசம்பர் 23ம் திகதியன்று மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமை.

2019 இல், வனாத்தவில்லு பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டமை.

2019இல் மாவனல்லையில் தஸ்லீம் என்பவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை.

2019 ஏப்ரல் 16ஆம் திகதியன்று, காத்தான்குடி, பாலமுனை பகுதியில் உந்துருளி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டமை.

2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற எட்டு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என்பனவே இந்த திட்டத்தின் தொடர்ச்சியான சம்பவங்களாகும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

இந்தநிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தவறுகள் இழைக்கப்பட்டு, திருத்தங்களும்; செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், வவுணதீவு காவல்துறையினரின் கொலைகளைப் புனர்வாழ்வு பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களே செய்ததாகக் கூறி, அஜந்தன் மற்றும் சர்வானந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

எனினும், தற்போதைய விசாரணைகளின் மூலம், இந்தக் கொலைகளை தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் செய்யவில்லை என்பதும், சஹாரான் தலைமையிலான குழுவே செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 2018 ஆம் ஆண்டிலேயே வவுணதீவு கொலைகளின் உண்மையான குற்றவாளிகள் அதாவது சஹாரான் குழுவினர் கைது செய்யப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில், விசாரணைகளைத் திசைதிருப்பியமை மற்றும் தடயங்களை மறைத்தமை தொடர்பில் யசீல் பாவா காத்தான்குடி-ஜெகீல் மற்றும் பொத்துவில் சரத் சமந்த போன்றோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் இந்தத்தாக்குதலுக்குப் பின்னாலுள்ள சதித் திட்டத்தைக் கண்டறிய விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு வவுணதீவில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட முறையில் திசைதிருப்பப்பட்டது என அமைச்சர் குறிப்பிட்டார்.

அப்போது கொல்லப்பட்ட அந்த அதிகாரிகளிடமிருந்து காணாமல் போன இரண்டு துப்பாக்கிகள் புதிய விசாரணைகளின் மூலம் நிந்தவூர் மற்றும் வனாத்தவில்லு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முகமது ஷரீப் ஆதம் லெப்பை என்ற கபூர் மாமா என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டன.

2018 லேயே இந்தக் கொலைகளுக்குப் பின்னால் சஹாரான் குழுவினர் இருப்பது கண்டறியப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சாலி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது, இஸ்லாமிய தீவிரவாதிகளின் செயல்பாடுகளை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவற்றைத் தடுக்கத் தவறியதாகவும், தாக்குதலுக்குப் பின்னர் குற்றவாளிகளைப் பாதுகாக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

விசாரணைகளைச் சரியாக முன்னெடுப்பதற்குப் பதிலாக, கடந்த கால அரசாங்கங்கள் பல தடைகளை ஏற்படுத்தியதாக அவர் விமர்சித்தார்.

கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த 48 மணி நேரத்திற்குள், ஷானி அபேசேகர உள்ளிட்ட 22 குற்றப்புலனாய்வு அதிகாரிகளை இடமாற்றம் செய்தார்.

எந்தவித நீதிமன்ற உத்தரவுமின்றி குற்றப்புலனாய்வுத்துறையில் பணியாற்றிய 704 அதிகாரிகளுக்கு சட்டவிரோதப் பயணத்தடை விதிக்கப்பட்டது.

இந்த சட்டவிரோதப் பயணத்தடை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, ஒரு பிரதிப் காவல்துறை மா அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கங்கள் ஹேஜாஸ் ஹிஸ்புல்லா போன்றவர்களைக் கைது செய்து விசாரணைகளைத் திசைதிருப்பினர்.

உதய கம்மன்பில போன்றவர்கள் இப்போது சஹாரானே மகா மூளையாளர் எனக் கூறுவது ஒரு “பலவீனமான திரைக்கதை” என அமைச்சர் விமர்சித்தார்.

சஹாரானுக்கு மேலிருந்து அவரை இயக்கிய ஒரு குழு அல்லது நபர் பற்றிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

அது குறித்த விசாரணைகள் மிக இரகசியமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தமது நாடாளுமன்ற உரையில் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது விசாரணைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

270 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட மற்றும் 46 வெளிநாட்டவர்கள் உயிரிழந்த இந்த பாரிய தாக்குதல் தொடர்பில், தற்போதைய அரசாங்கம் எவருக்கும் அஞ்சாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான விசாரணைகளை முன்னெடுக்கும் என அமைச்சர் உறுதியளித்தார்.

இந்தநிலையில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் எனத் தெரிவித்து அமைச்சர் ஆனந்த விஜேபால தமது உரையை நிறைவு செய்தார்.