இலங்கை போதைப்பொருள் கடத்தல் மையமானது எப்படி? – ஐ.நா. விரிவான அறிக்கை
கடல் மார்க்கமாக நடைபெறும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளும் பிரதான இலக்குகளாகவும், போதைப்பொருள் பரிமாற்றம் செய்யும் மையங்களாகவும் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பிரிவு, அரச நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளின் கட்டமைப்பு மற்றும் இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதியில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கான அனுசரனை தொடர்பான தகவல்களை ஆராய்ந்து இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதான காரணம்
ஆசியாவில் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு அண்மையில் அமைந்திருப்பதாலும், நீண்ட கடற்கரை மற்றும் அதன் பூகோள அமைப்புக் காரணமாகவும், இந்த நாடுகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிரதான மையங்களாக மாறியுள்ளன.
தங்க பிறை (Golden Crescent) என அழைக்கப்படும் ஈரான், ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஊடாகப் பெறப்படும் கிரிஸ்டல் மெத் – ஐஸ் (Crystal Meth – Ice) மற்றும் ஹெரோயின் போன்ற செயற்கை போதைப்பொருட்கள் இலங்கைக்குள் அதிகளவில் கொண்டுவரப்படுகின்றன.
கடத்தல் வழிமுறைகள் மற்றும் பிரவேசப் பகுதிகள்
பலூசிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ள மக்ரான் கடற்கரை (Makran coast) வழியாக இந்தப் போதைப்பொருள் விநியோகம் ஆரம்பமாகிறது.
இந்த போதைப்பொருட்கள் ஆபிரிக்காவுக்கு விநியோகிக்கப்படுவதுடன், அங்கிருந்து அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மறுவிநியோகம் செய்வதற்காக மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கும் கடத்தி வரப்படுகின்றன.
கடத்தல்காரர்கள் அரபிக் கடலில் தொடங்கி, இந்து சமுத்திரம், மாரைத்தீவு மற்றும் மொரீஷியஸ் தீவு போன்ற பகுதிகளைச் சுற்றி வந்து இலங்கை வருகின்றனர்.
மேலும், இவர்கள் இந்தப் போதைப்பொருட்களைக் கடத்துவதற்குப் நெடுநாள் ஆழ்கடல் படகுகள் (Multi-day Trawlers) மற்றும் பெரிய சரக்குக் கப்பல்களையும் பயன்படுத்துகின்றனர்.
இலங்கைக்கான நுழைவு வழிகள்
வடக்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்கள் (மன்னார், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கற்பிட்டி) பகுதிகளில் அதிகளவில் கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன.
தெற்கு கடற்பகுதி வழியாக ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களைக் கடத்தல்காரர்கள் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
போதைப்பொருள் வலையமைப்பின் கட்டமைப்பு
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் பெரும்பாலும் ‘ஆதரவாளர்-பயனாளர்’ வலையமைப்புகள் மூலமே இயங்குகின்றன.
இவற்றின் உயர்மட்டத் தலைமையானது ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, மற்றும் பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் இருந்தோ அல்லது இலங்கைச் சிறைச்சாலைகளில் இருந்தோ செயற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் மட்டத்தில் ஏகபோக உரிமை காணப்பட்டாலும்,பெரிய நகரங்களில் சந்தைக்காகப் பல குழுக்கள் போட்டியிடுகின்றன.
போதுமான பயிற்சியின்மை, ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பழமையான உபகரணங்கள் காரணமாக காவல்துறையின் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவர்கள் சிறைச்சாலைகளைத் தவறாக வழிநடத்தி சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இந்தக்குழுக்களின் செயற்பாட்டாளர்களில் முன்னாள் ஆயுதப் படையினர் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் (LTTE) உறுப்பினர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாட்டில் நிலவும் சமூக-அரசியல் அமைதியின்மைக் காலங்கள், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளின் வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதாகவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
முக்கிய குறைபாடுகள், பரிந்துரைகள்
ஐக்கிய நாடுகளின் இந்த அறிக்கை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உள்ள பிரதான குறைபாடுகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
சட்டம் அமுலாக்கம் மற்றும் சட்ட நிறுவனங்களுக்குள் காணப்படும் ஊழலை ஒரு பாரிய பிரச்சினையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், போதைப்பொருள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிவடைய அதிக கால அவகாசம் எடுப்பதையும் ஒரு பலவீனமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
இதன் காரணமாக, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தற்போதுள்ள சட்ட கட்டமைப்பை புதுப்பித்து வலுப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
பகிரவும்...