இலங்கையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் தாயகம் திரும்ப உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை கடற்படையினரால் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் 28.12.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
சிறை பிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களில், 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மூன்று மீனவ படகு ஓட்டுநர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நம் நாட்டு மீனவர்கள் அங்கு சந்திக்கும் கடினமான சூழ்நிலையையும், மீனவர்களின் குடும்பங்கள் இங்கு எதிர்கொள்ளும் துயரங்களையும் கருத்தில் கொண்டு, விடுவிக்கப்பட்ட மீனவர்களை விரைவில் தாயகம் திரும்ப தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
