இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்
இலங்கையில் மதுபானப் பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற “மதுபானம் குறித்த உண்மைகளும் கட்டுக்கதைகளும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு” என்ற தலைப்பிலான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 15,000 முதல் 20,000 பேர் வரை உயிரிழக்கின்றனர்.
வீதி விபத்துக்கள், புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களால் ஏற்படும் மரணங்களின் மொத்த எண்ணிக்கையை விடவும், மதுபானத்தினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் ஆகிய இரண்டுமே இந்த உயயிரிழப்புகளுக்குப் பிரதான காரணிகளாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, மதுபானக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக இருப்பது அரசியல்வாதிகளுக்கும் மதுபான நிறுவனங்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு என்று புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு மதுபான உற்பத்தி நிலையங்கள் அல்லது விற்பனை நிலையங்களின் உரிமம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் பலத்தைத் தக்கவைக்க மதுபான நிறுவனங்களின் நிதி பயன்படுத்தப்படுவதாகவும், நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், இலங்கையில் சட்டவிரோத மதுபானப் பயன்பாடு 300% அல்லது 37% இனால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்ததாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை.
அவ்வாறான அறிக்கையை அந்த நிறுவனம் வெளியிடவில்லை என்றும் இந்தச் சந்திப்பின் போது தெளிவுபடுத்தப்பட்டது
