Main Menu

இலங்கையின் வரி வருமானம் அதிகரிப்பு

இலங்கையின் வரி வருமானம் இந்த ஆண்டின் (2025) மூன்றாம் காலாண்டு முடிவில், முந்தைய ஆண்டை விட 32.5 வீதமாக அதிகரித்துள்ளது.
சுங்கத்துறை மூலம் இறக்குமதிக்கான மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்நாட்டு உற்பத்தி வரி மூலம் வரலாறு காணாத வரி வசூலே இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் இறுதிக்குள் வரி வருமானம் 32.5 வீதம் அதிகரித்து ரூ.3,563 பில்லியனாக உயர்ந்துள்ளது. முதன்மை உபரி ரூ.1,465 பில்லியனாக உயர்ந்துள்ளது.
அரசாங்கத்தின் வருமானம் (மானியங்கள் உட்பட) 31.0 வீதம் அதிகரித்து ரூ.3,834.9 பில்லியனாக உயர்ந்ததால், பாதீட்டு பற்றாக்குறை பெயரளவில் 54.5 வீதம் குறைந்து ரூ.441.4 பில்லியனாக சுருங்கியுள்ளது.
2024 உடன் ஒப்பிடுகையில் 2025 இன் முதல் ஒன்பது மாதங்களில் இறக்குமதி வட் 42 வீதம் அதிகரித்து ரூ.605 பில்லியனாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி வரி 94 வீதம் அதிகரித்து ரூ.552 பில்லியனாக உயர்ந்துள்ளது.
மோட்டார் வாகனங்களுக்கான உள்நாட்டு உற்பத்தி வரி ரூ.311 பில்லியனில் இருந்து ரூ.349 பில்லியனாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
வருமான வரி 11.9 வீதம் அதிகரித்து ரூ.831 பில்லியனாக உயர்ந்துள்ளது.
மொத்தமாக வட் வரி 31 வீதமாக அதிகரித்து ரூ.1,239 பில்லியனாக உயர்ந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நிலையான விலைகளில் மொத்த தேசிய உற்பத்தியானது, ரூ.6,360.6 பில்லியனாக இருந்தது, இது 2024 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் ரூ.6,068.3 பில்லியனாக இருந்தது.
மூலதனச் செலவு மற்றும் நிகர கடன் 2 வீதம் குறைந்து ரூ.455 பில்லியனாக உள்ளது. மொத்த வட்டிச் செலுத்தல்கள் செப்டம்பர் இறுதிக்குள் 8.6 வீதம் அதிகரித்து ரூ.1,907 பில்லியனாக உயர்ந்துள்ளது.
பகிரவும்...
0Shares